fbpx
Homeதலையங்கம்தனித் தனியாகப் போட்டி - ‘இந்தியா’ கூட்டணி வியூகம்!

தனித் தனியாகப் போட்டி – ‘இந்தியா’ கூட்டணி வியூகம்!

‘இந்தியாகூட்டணி ஆரம்பித்தபோது இருந்த பலம், தற்போது குறைந்து போய் விட்டது. பிரதமர் மோடிக்கு எதிராக போட்டியிட்டு அதனால் வெற்றி பெற இயலாது என்பதே பாஜக தலைவர்களின் முக்கியப் பிரசாரமாக மாறி உள்ளது.
அதற்கு ஒரே காரணம் இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சிகள் சில, தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்து இருப்பது தான்.

அதே நேரத்தில் மோடி தலைமையிலான பாஜக அரசை வீழ்த்தியே ஆக வேண்டும் என்பதில் அத்தனை தலைவர்களும் உறுதியாக இருக்கின்றனர் என்பதில் சந்தேகமில்லை.

‘இந்தியா’ கூட்டணியில் இருந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும், ஆர்.எல்.டி தலைவர் ஜெயந்த் சௌத்ரியும் பா.ஜ.க பக்கம் போய்விட்டநிலையில், மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால், பகவந்த் மான், பருக் அப்துல்லா போன்ற தலைவர்கள் தனியாகப் போட்டியிட்டு, தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைந்து ஆட்சியமைக்கலாம் என்று சொல்கிறார்கள்.

மாநில அளவிலான தங்கள் தனித்தன்மையை இழந்து விடக்கூடாது என்ற அச்சத்தில் இந்த முடிவை அவர்கள் எடுத்திருக்கலாம். மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் இந்தக் குழப்பங்களெல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிட வேண்டும் என்பது தான் ஜனநாயகம் ஸ்திரப்பட வேண்டும் என நினைக்கும் மக்களின் கவலையாக உள்ளது.

கூட்டணி கட்சிகள் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி என்ன நிலைபாடு எடுக்கப்போகிறது என்பது தான் இப்போது மிக முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்தியா கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் தொகுதிகளை காங்கிரஸ் விட்டுக் கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வியூகம் சரியாக அமையுமானால் இந்தியா கூட்டணியின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக மாறும் என்பதில் ஐயமில்லை.

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி என்பது கொள்கைக் கூட்டணி.- பதவி என்பது இரண்டாம் பட்சம்தான். அதனால்தான் இந்தக் கூட்டணி வலுவாக இருக்கிறது. இக்கூட்டணியின் தலைவராக மு.க.ஸ்டாலின் காட்டும் வழியை இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களும் ஏற்று செயல்பட்டால் அதுவே வெற்றிக்கு வித்திட்டு விடும்.

வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தல், தலைவர்களை நம்பி அல்ல; மக்களை நம்பி இருக்கிறது. இந்தியா கூட்டணியின் வியூகம் வென்று, புதியதோர் நல்லாட்சி ஒன்றியத்தில் மலரட்டும்!

படிக்க வேண்டும்

spot_img