fbpx
Homeதலையங்கம்புத்தாண்டில் சாதனை படைக்கப்போகும் இஸ்ரோ!

புத்தாண்டில் சாதனை படைக்கப்போகும் இஸ்ரோ!

ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து டிசம்பர் 31ஆம் தேதி அதிகாலை இந்திய விண்வெளி ஆய்வு அமைப்புக்குச் (இஸ்ரோ) சொந்தமான பிஎஸ்எல்வி விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த பிஎஸ்எல்வி விண்கலத்துக்குள் இரண்டு ஸ்பேடெக்ஸ் விண்கலங்கள் கொண்டு செல்லப்பட்டன. விண்வெளியில் அந்த இரு விண்கலங்களையும் இணைப்பது தான் இத்திட்டத்தில் முக்கிய நோக்கம்.

பிஎஸ்எல்வி விண்கலத்துக்குள் இருக்கும் இரண்டு விண்கலங்களும் புவியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த இரு ஸ்பேடெக்ஸ் விண்கலங்களும் தலா 220 கிலோ எடை கொண்டுள்ளன. இரு விண்கலங்களுக்கு இடையே மின்சாரப் பரிமாற்றம் நடந்தேறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்குத் தேவையான முக்கியமான தரவுகளை இவ்விரு விண்கலன்கள் பூமிக்கு அனுப்பிவைக்கும். விண்கலங்களை இணைக்கும் தொழில்நுட்பம் அடுத்த ஒரு வாரத்தில் சோதனையிடப்படும் என்று இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் தெரிவித்தார்.

இந்த முயற்சியில் வெற்றி பெற்றால் விண்வெளியில் விண்கலங்களை இணைத்த நான்காவது நாடாக இந்தியாவுக்குப் பெருமை சேரும். சமீப காலமாக தோல்விகளே இல்லாமல் வெற்றிப்படிகளில் ஏறி வருகிறது இஸ்ரோ. விண்கலங்களை இணைப்பதிலும் அது வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை. வெற்றிச்செய்தியை அறிய இந்தியத் திருநாடே காத்திருக்கிறது.

விண்வெளிச் சாதனைகளை அசராமல் நிகழ்த்தி உலகையே தன்பால் ஈர்த்துவரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்!

படிக்க வேண்டும்

spot_img