fbpx
Homeபிற செய்திகள்கரூரில் ரூ.247.57 கோடி கடன் உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்

கரூரில் ரூ.247.57 கோடி கடன் உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்

கரூரில், குறு, சிறு தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் 1236- பயனாளிகளுக்கு ரூ.247.57 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் வழங்கினார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் 1236 பயனாளிகளுக்கு ரூ.247.57 கோடி மதிப்பீட்டில் தொழில் முனைவோருக்கான வங்கி கடன்உதவிகளை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கூறியதாவது:
இன்று வழங்கக்கூடிய மிகப் பெரிய நிதி உதவி மூலம் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய தாக்கத்தை எளியோர் வாழ்வில் ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமில்லை.

குறிப்பாக கரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அனைத்து விதமான கடன் உதவிகள் அனைத்து மக்களும் திட்டத்தின் உடைய பயன் மற்றும் பலன்கள் முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற வகைகளில் உறுதியாக செயல்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு திட்டத்தினுடைய வழிமுறையை நெறிமுறைப்படுத்தப்பட்டு உரிய காலத்திற்குள் அதற்கான செயல் திட்டம் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அலுவலர்கள் தான்.

பொது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதை எளிமைப்படுத்த வேண்டும் என்ற நீண்ட நெடிய பயணத்தை மாவட்ட நிர்வாகத்தினுடைய முயற்சியில் மேற்கொண்டு வருகிறோம். கரூர் மாவட்டத்தை பொருத்தவரை பல்வேறு வங்கிகளிலும் பல்வேறு கூட்டுறவு வங்கியின் மூலம் கடன் பெறுவது எளிமையாக்கப்பட்டுள்ளது என்பதனை நான் உணர்கிறேன்.

இந்த திட்டத்தில் நூறு சதவீதம் சிறப்பு நிலையை அடைய அதற்கான முயற்சிகள் கண்டிப்பாக நடைபெற்று வருகிறது. எளியோர் மற்றும் நடுத்தர மக்கள் அனைவருக்கும் நாங்கள் உங்களுடைய குரலாக ஒலித்து உங்களுடைய தேவைகளை பெறுவதற்கு நாங்கள் தொடர்ந்து உழைத்து கொண்டிருக்கிறோம்.

கல்விக் கடனிற்கான விழிப்புணர்வு அனைவருக்கும் கிடையாது. தமிழ்நாட்டின் முதல் முறையாக கரூர் மாவட்டத்தில் கல்வி கடன் பெறுவதற்கு வழிகாட்டியாக ஒரு உதவி மையம் உருவாக்கியுள்ளோம். கடன் பெறுவதற்கான வழிமுறைகளின்படி அனைத்து வங்கிகளிலும் சரியான பதில்கள் கிடைக்கும் அதுபோல தான் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இந்த முயற்சிகளின் பலனாக இன்று 250 கோடி ரூபாய்க்கு மிகப்பெரிய கடன் மேளாவில் அரசு மானியத்துடன் பல்வேறு கடன் உதவிகளை வழங்கி இருக்கின்றோம். இந்த கடனை ஒரு மூலதனமாக கொண்டு நீங்கள் முன்னெடுக்கக்கூடிய அந்த பணிகளில் சிறப்பாக இருக்க வேண்டும்.

நீங்கள் வெற்றி பெற்றால் தான் உங்களை சுற்றி இருப்பவர்கள் இந்த சமுதாயத்தில் வெற்றி பெற முடியும். அதன் மூலம் இந்த கரூர் மாவட்டமே வளர்ச்சியடையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட தொழில் மையம், கூட்டுறவுத்துறை மகளிர் திட்டம், தாட்கோ மற்றும் குறு, சிறு நிறுவனங்கள் துறை ஆகிய துறையில் சார்பில் 1236 பயனாளிகளுக்கு ரூ.247.57 கோடி மதிப்பீட்டில் தொழில் முனைவோருக்கான வங்கி கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் சீனிவாசன், மாவட்ட தொழில் மைய மேலாளர் ரமேஷ், முன்னோடி வங்கி மேலாளர் வசந்த் குமார், தாட்கோ மேலாளர் பாலமுருகன், வங்கி மேலாளர்கள் அருண்குமார், தனசேகர், சதீஷ்குமார், அரசு அலுவலர்கள், பயனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img