fbpx
Homeபிற செய்திகள்நீதித்துறை வரலாற்றில் இடம்பிடித்த கெஜ்ரிவால்!

நீதித்துறை வரலாற்றில் இடம்பிடித்த கெஜ்ரிவால்!

கடந்த ஒன்றரை வருடங்களாக பெரிய அளவில் பேசப்பட்டு வரும் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21-ந்தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஒரு மாநிலத்தின் முதல்வர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். அவர் டெல்லி திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அரவிந்த் கெஜ்ரிவால், தனது கைது நடவடிக்கையே தவறு & சட்டவிரோதம் என்று கூறியிருந்தார். அதேநேரம் அவர் இடைக்கால ஜாமீன் எதுவும் கேட்கவில்லை.

இந்நிலையில் தேர்தல் நேரத்தில் கைது செய்தது ஏன்? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் அளிப்பது பற்றி 10-ந்தேதி (நேற்று) தீர்ப்பு அளிப்பதாக நீதிபதிகள் தாமாகவே கூறியிருந்தனர்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை 44 பக்க பிரமாண பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது. அதில், எத்தனையோ அரசியல்வாதிகள், சிறையில் இருந்தபடி தேர்தலில் போட்டியிட்டுள்ளார்கள். ஆனால், தேர்தல் பிரசாரம் செய்வதற்காக எந்த அரசியல்வாதிக்கும் ஜாமீன் அளிக்கப்பட்டது கிடையாது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது அடிப்படை உரிமை அல்ல, எனவே, இடைக்கால ஜாமீன் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் அளித்தால், இது தவறான முன்னுதாரணமாகி விடும், என அமலாக்கத்துறை கூறி இருந்தது.
ஆனால் அமலாக்கத்துறையின் வாதத்தை நிராகரித்த உச்சநீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

தேர்தல் பிரச்சாரத்திற்காக சிறையில் இருக்கும் ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கு நிவாரணம் வழங்குவது இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே இதுதான் முதல் முறையாகும். அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பையும் மீறி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது நீதித்துறை வரலாற்றில் அற்புதமான தீர்ப்பாகப் பார்க்கப்படுகிறது.

அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ போன்ற அமைப்புகளை எதிர்க்கட்சிகளை வேட்டையாட மத்திய அரசு பயன்படுத்துவதாக முன்வைத்த கெஜ்ரிவாலின் வாதம், இந்த வழக்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றால் மிகையாகாது.
அரவிந்த் கெஜ்ரிவாலின் பிரசாரம் தேர்தல் களத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

படிக்க வேண்டும்

spot_img