fbpx
Homeபிற செய்திகள்தந்தை பெரியார் ஈ.வே.ராமசாமி கண்ட கனவை, கே.பி.ராமசாமி நனவாக்குகிறார் கே.பி.ஆர். மில் பணியாளர்கள் பட்டமளிப்பு விழாவில்...

தந்தை பெரியார் ஈ.வே.ராமசாமி கண்ட கனவை, கே.பி.ராமசாமி நனவாக்குகிறார் கே.பி.ஆர். மில் பணியாளர்கள் பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் புகழாரம்


தந்தை பெரியார் ஈ.வே.ராமசாமி கண்ட கனவை, கே.பி.ராமசாமி நனவாக்கிக் கொண்டிருப்பதைக் கண்டு வியப்பதாக கே.பி.ஆர். மில் பணியாளர்களின் 11வது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் புகழாரம் சூட்டினார்.

கோவை கே.பி.ஆர். மில்லில் பணியாற்றி வரும் பெண் தொழிலாளர்களின் உயர்கல்வியை அந்த நிறுவனம் ஊக்குவித்து வருகிறது. ஆண்டுதோறும், மில்லில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களின் உயர்கல்விக்கு உதவும் இந்த நிறுவனம் மூலம் இதுவரை 41,000க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது உயர்கல்வியை முடித்துள்ளனர்.

நடப்பு கல்வி ஆண்டில் மட்டும் 5,000க்கும் மேற்பட்ட பெண்கள் உயர்நிலைப் படிப்பைத் தொடர்ந்து வருகின்றனர். இதனிடையே கே.பி.ஆர் பணியாளர்களான 579 பெண்கள் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றனர்.

இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிப்பில் முதலிடம் பெற்றவர்களுக்கு கே.பி.ஆர் குழுமத்தின் சார்பில் தலா ரூ.5,000 பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

முன்னதாக விழாவில் கே.பி.ஆர் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அனந்தகிருஷ்ணன் தனது வரவேற்புரையில், “பட்டம் பெறும் பெண் தொழிலாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் வாழ்த்துகள். இந்த நிகழ்வை ஒரு பெருமையாக கருத வேண்டும். ஒருவரின் வாழ்வை மேம்படுத்தும் பணி தொடரும்” என்றார்.

கே.பி.ஆர் பெண் கல்விப் பிரிவின் முதல்வர் சரவண பாண்டி கல்லூரியின் ஆண்டறிக்கையை வாசித்தார். தொடர்ந்து, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பேசியதாவது: கே.பி.ஆர். மில்ஸ் குழுமத்தினர் பணியாளர்களை பட்டதாரிகளாக்கி மண்ணுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.

பஞ்சாலைத்தொழிலாளியின் ஏழை வீட்டுப்பிள்ளை படித்து தங்கம் வென்றார் என்றால் கே.பி.ஆர். கனவு நிறைவேற்றியுள்ளது என்றே அர்த்தம்.

இதுபோன்ற நிகழ்வு தமிழகத்தைத் தவிர வேறு எங்கு நடைபெறும்? தன்னிடம் பணியாற்றுவோரை பட்டதாரிகளாக்கும் நிறுவனம் வேறு எங்கும் இல்லை.
இங்கு அனைத்து மாநில பெண்களும் பணியாற்றி படித்து வருகின்றனர்.

குக்கிராமத்தில் பிறந்தவன் நான். வறுமையின் வலி என்ன என்று எனக்கு தெரியும். வறுமை என்றும் கல்விக்குத்தடை அல்ல என்பதை மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.
அப்துல்கலாம் செல்வந்தர் வீட்டு பிள்ளையா? அவர் கண்ட கனவை ஒரு சிறு ஜீவனாக வாழ்ந்தாலே இந்த நாட்டை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல முடியும். கே.பி.ஆர். பல்லாண்டு வழந்து பல பட்டதாரிகளை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு கோவி.செழியன் பேசினார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது:
எழுச்சியுடனும், பெருமையுடனும் நடைபெறும் நிகழ்வு இது. தந்தை பெரியார் ஈ.வே.ராமசாமி கண்ட கனவை, கே.பி.ராமசாமி நனவாக்கிக் கொண்டிருப்பதைக் கண்டு வியக்கிறேன்.

கல்வி மட்டுமே சமத்துவத்தை மலர்ச்செய்யும் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியதைப் போல, என்றும் கல்வியை விட்டுவிடாதீர்கள்.
இது போட்டி நிறைந்த உலகம் தான்.

முழு கவனத்தையும் படிப்பில் செலுத்துங்கள். தன்னைப்போலவே அனைவரும் மேலே வர வேண்டும் என்று நினைப்பவர் தான் கே.பி.ஆர். எனவே படியுங்கள், நிறைய அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் ஒரு முதலாளியாக வளர வேண்டும். வாழ்ந்து காட்டுவோம் திட்டம் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் எம்.எஸ்.எம்.இ., துறையில் 13% க்கு குறைவான பெண்களே உள்ளனர். அது அதிகரிக்க வேண்டும். அதற்கு தமிழக அரசு துணை நிற்கும். இவ்வாறு அன்பில் மகேஷ் பேசினார்.

தொடர்ந்து, கே.பி.ஆர் மில் துணை தலைவர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.
இவ்விழாவில், நேச்சுரல்ஸ் துணை உரிமையாளர் குமார வேல், சிகரம் சதீஸ்குமார், இன்போசிஸ் துணைத்தலைவர் சுஜித்குமார், கே.பி.ஆர் பணியாளர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img