கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், நாரலப்பள்ளி ஊராட்சி, ஏக்கல்நத்தம் மலை கிராமத்தில், ஊரக வளர்ச்சித்துறை, வருவாய் துறை, வனத்துறை, காவல் துறை அலுவலர்களுடன் இணைந்து மலை கிராமத்திற்கு மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் கள ஆய்வு மேற்கொண்டார்.
இக்கள ஆய்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடம் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது மலை கிராம மக்கள் ஆம்புலன்ஸ் வசதி, நியாய விலைக்கடை, வீட்டுமனை பட்டா வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதனடிப்படையில் ஆம்புலன்ஸ் வந்து செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், இம்மலை கிராமத்தில் 230 குடும்ப அட்டை உள்ள நிலையில் வாரத்திற்கு மூன்று நாட்கள் நியாய விலைக்கடை அரசின் அனுமதி பெற்று பகுதி நேர நியாய விலைக்கடை விரைவில் துவக்கப்படும் என உறு தியளித்தார்.
மேலும், சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இக்கிராமம் மலை பகுதியில் இருப்பதால் தாழ்வான பகுதி அதிகம் உள்ள இடங்களில் கற் சாலை அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், நாரலப்பள்ளி முதல் வனப்பகுதி வழியாக ஏக்கல்நத்தம் செல்லும் சாலை வரை இரண்டு இடங்களில் தடுப்பணை உள்ள இடத்தில், மழை காலங்களில் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. ஆகையால் கடந்து செல்ல உயர்மட்ட பாலம் அமைத்து தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதனடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடியாக ஆய்வு செய்து கருத்துரு தயார் செய்ய ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், மலைப்பகுதிகளில் இரண்டு இடங்களில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் உள்ள கொண்ட ஊசி வலைவில் மேடான பகுதிகளில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல சாலை சமன்படுத்த, கள ஆய்வு மேற்கொண்டு அளவீடு செய்து நான்கு சக்கர வாகனங்கள் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, அனைத்து குடியிருப்பு பகுதிகளுக்கு நடந்து சென்று அடிப்படை வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் இம்மலை கிராமத்தில் விளையும் வேளாண் பொருட்கள் குறித்தும், புளி உற்பத்தி செய்து கொண்டிருந்த பொதுமக்களிடம் புளி உற்பத்தி, விற்பனை மற்றும் வருவாய் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், ஏக்கல்நத்தம் கிராமத்தில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் குழந்தைகள் கட்டாயம் கல்வி கற்க வேண்டும். மேலும், உயர் கல்வி பயில அருகில் உள்ள மேகலசின்னம்பள்ளி கிராமத்திற்கு கட்டாயம் பொற்றோர்கள் அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
மேலும், இம்மலை கிராமம் ஆந்திர மாநில எல்லையை ஒட்டி உள்ளதால், வெளி ஆட்கள் வருகை, கள்ளதனமாக மதுபானம் உற்பத்தி, விற்பனை செய்வது, வன விலங்குள் வேட்டையாடுவது குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக காவல் துறை அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மேலும், கள்ளதனமாக மதுபானம் உற்பத்தி, விற்பனை செய்ய கூடாது என மலை கிராம மக்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் உங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். குழந்தை திருமணத்தை தடுக்க ஒரே வழி பெண் பிள்ளைகளை உயர் கல்வி பயில அனுப்ப வேண்டும்.
என தெரிவித்தார்.
இந்த ஆய்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் கவிதா, செயற்பொறியாளர் மலர்விழி, உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், ஜெகதீஷ் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாசங்கர், சிவபிரகாசம், உதவி பொறியாளர்கள் ஆசை தம்பி, அன்புமணி, பணி மேற்பார் வையாளர்கள் ஆர்த்தி, கிருஷ்ண வேணி மீரான், கிராம நிர்வாக அலுவலர், காவல் துறை, வனத் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.