fbpx
Homeபிற செய்திகள்மகா கும்பமேளாவில் கேட்ட மரண ஓலம்!

மகா கும்பமேளாவில் கேட்ட மரண ஓலம்!

உ.பி. மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் ஜனவரி 13ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா பிப்ரவரி மாதம் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் கோடிக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இதுவரை 20 கோடி பக்தர்களுக்கு மேல் புனித நீராடி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று மௌனி அமாவாசையை முன்னிட்டு 10 கோடி பேர் வருகை தரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனையொட்டி, தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இரவு 10 மணி முதல் மக்கள் கூட்டம் கூட்டமாக சங்கமத்தை அடைய ஆரம்பித்தது. குறிப்பாக திரிவேணி சங்கமத்தின் மூக்கு பகுதியில் புனித நீராட அனைவரும் விரும்பினர்.

இதனால் அங்கு கட்டுக்கடங்கா கூட்டம் அலைமோதியது.
இதனையடுத்து நீராடிவிட்டு வெளியேறும்படி பக்தர்களை நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்திவந்தது. ஆனால் புனித நீராட மக்கள் கூடிக்கொண்டே இருந்தனர். இரவு 1 மணி முதல், மக்கள் குளிக்க செல்ல வேண்டிய பாதையில் மக்கள் கூட்டம் அதன் கொள்ளளவுக்கு அதிகமாகத் தொடங்கியது.

அதேநேரத்தில், மௌனி அமாவாசை அன்று நீராட வந்தவர்களில் பலர் பேரிகார்டின் ஓரத்தில் விரிக்கப்பட்ட தார்பாயின் மீது படுத்திருந்தனர்.
குளிப்பதற்காக படித்துறை வரை செல்ல பாரிகார்டுகளுடன் மக்களுக்கு வழி ஏற்படுத்தப்பட்டிருந்த போதும், கூட்டம் அதிகமாகி 1.45 மணி முதல் 2 மணி வரை மக்கள் கட்டுப்பாட்டை மீறி தடுப்புகளை தாண்டி குதித்துச் செல்ல ஆரம்பித்தனர்.

தடுப்புக் கட்டையைத் தாண்டி குதித்தபோது, அங்கு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மக்கள் விழுந்தனர், இதைத் தொடர்ந்து மரக்கட்டைகள் உடைந்து, கூட்டம் திடீரென நகர்ந்து அங்கு படுத்திருந்த மக்களை மிதித்தது.

இந்த நெரிசலில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் தவிர குளிக்கச் சென்றவர்களும் கீழே விழுந்து உடல் நசுங்கினர். அங்கே மரணஓலம் கேட்டிருக்கிறது. இதில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர்.

பலியானோர் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த அசம்பாவித சம்பவத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு தான் காரணம் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளது.

இதனை ஒரேயடியாக மறுத்து விட முடியாது. நேற்று ஒரே நாளில் ஒரே இடத்தில் சுமார் 10 கோடி பேர் குவிந்ததால் தான் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நிலைமை எல்லைமீறியது.

ஆனாலும் ஒரே இடத்தில் பக்தர்கள் புனிதநீராட குவிவதை தவிர்த்திருக்க வேண்டும். பக்தர்கள் கூட்டத்தை பிரித்து மேலும் சில இடங்களில் நீராடும் படியாக அனுப்பும் முயற்சி தோல்வி அடைந்திருக்கிறது. பாதுகாப்பு திட்டமிடுதலில் எங்கோ குறைபாடு நிகழ்ந்திருக்கிறது.

இனி இதுமாதிரியான பெருங்கூட்டம் திரளும் நிகழ்வுகளில் இதுமாதிரியான உயிரிழப்புகளைத் தடுக்க எப்படி செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தும் பாடமாக மகாகும்பமேளா புனித நீராடல் அமைந்துள்ளது.
நடந்த சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு முதல்வர் யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளார்.

வருங்காலங்க ளிலாவது இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாதபடி திட்டமிட இது வழிகோலும். தேவைப்பட்டால் ராணுவத்தினர் உதவியைக் கூட மாநில அரசு கேட்டுப் பெறலாம்.

மகாகும்பமேளாவின் புனிதநீராடல் இன்னும் முடியவில்லை. மீண்டும் ஒரு அசம்பாவிதம் நிகழாமல் நீராடல் உள்ளிட்ட சடங்குகள் பாதுகாப்பாக நடைபெற மாநில அரசு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.
பக்தர்கள் பொறுமையாகவும் அமைதியாகவும் பாதுகாப்புடன் புனிதநீராட வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img