fbpx
Homeபிற செய்திகள்கோவையில் சமூக சேவையாளர்களுக்கு மகாத்மா காந்தி நினைவகம் சார்பில் விருது

கோவையில் சமூக சேவையாளர்களுக்கு மகாத்மா காந்தி நினைவகம் சார்பில் விருது

கோவையில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவகம் கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி நிறுவப்பட்டது. மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் அவரது உன்னதமான கொள்கைகளையும் மக்களுக்கு விளக்குவதற்காக இந்த நினைவகம் மற்றும் அருங் காட்சியகம் செயல்பட்டு வருகிறது.

1934-ஆம் ஆண்டு பிப்ரவரி 6 மற்றும் 7ஆம் தேதிகளில் கோவை வந்த மகாத்மா காந்தி, புகழ்பெற்ற விஞ்ஞானியும் அறிவியல் கண்டுபிடிப்பாளருமான ஜி.டி.நாயுடுவின் போத்தனூர் இல்லத்தில் தங்கியிருந்தார். அந்த நிகழ்வின் நினைவாக, அவரது இல்லம் புதுப்பிக் கப்பட்டு, மகாத்மா காந்தி நினைவகமாக மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தியின் கோவை வருகையின் 91 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் விதமாக, மனிதநேயம் விருது 2025 வழங்கும் விழா மகாத்மா காந்தி நினைவகத்தில் நடைபெற்றது.
கோவையில் சமூக சேவையில் தனித்துவம் பெற்ற 10 நபர்களை தேர்ந்தெடுத்து, அவர்களின் அயராத சேவையை பாராட்டி விருது வழங்கியுள்ளது.

விருது பெற்ற கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்: எம்.யோகநாதன், பி.மகேந்திரன், ராஜ சேது முரளி, ஏ.லோகநாதன், வி.வைர மணி, தஸ்லீமா நஸ்ரீன், கணேஷ் சோமசுந்தரம், எல்.உதிரம் கோபி, சி.ஜெயப்ரபா, என்.வள்ளி ஆகியோர் விருது பெற்றனர்.
விழாவில் முதன்மை விருந்தினராக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி, பேசியதாவது:- தேசப்பிதா மகாத்மா காந்தி பாதம் பட்ட இடத்தில் நாம் நிற்பது பெருமை. காந்தியின் அகிம்சை கொள்கை காலம்தாண்டி நிற்கிறது. காந்தியின் அமைதி வழியில் நாம் அனைவரும் அவரது கொள்கையை பின்பற்ற வேண்டியது முக்கியம். உலகம் அமைதி வழியில் பயணிக்க காந்திய அகிம்சை கொள்கை நமக்கு வழிகாட்டும். விருது பெறும் அனைவரையும் வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னாள் காந்திகிராம பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் காந்தியவாதி என். மார்க்கண்டன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். கோவையைச் சேர்ந்த கல்வியாளர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் தொடக்க உரையாற்றினார். விழாவில் மகாத்மா காந்தி நினைவக அறங்காவலர் ஜி.டி.ராஜ்குமார் வரவேற்புரை நிகழ்த்த, ஜி.டி.நாயுடு அறக்கட்டளை யின் நிர்வாக அறங்காவலர் ஜி.டி. கோபால் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img