நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக மலைரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து தினசரி காலை 7.10 மணிக்கு குன்னூர் வழியே உதகை செல்ல நீலகிரி மலைரயில் இயக்கப்பட்டு வருகிறது.
நூற்றாண்டு பழமை வாய்ந்த இம்மலைரயிலில் பயணித்தபடி நீலகிரி மலை இயற்கை அழகை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். இந்நிலையில், நேற்றிரவு மலைரயில் செல்லும் மலைப்பாதையில் பெய்த கனமழை காரணமாக ஹில்குரோ – அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே மண் சரிவு ஏற்பட்டது.
பெரிய பாறாங்கற்களும், மண்ணும் சரிந்து தண்டவாள பாதையை மூடியது..இதனால் இன்று மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. மலைரயில் கடந்து செல்லும் இருப்பு பாதையில் சரிந்து கிடக்கும் மண் மற்றும் பாறைகளை அகற்றி தண்டவாளத்தை சீரமைக்கும் பணி ரயில்வே பணியாளர்களால் துவக்கப்பட உள்ளது.
பலத்த மழல காரணமாக இதே போல் மண் சரிவுகள் ஏற்பட்டு கடந்த 18 ம் தேதி ரத்து செய்யப்பட்ட மலைரயில் போக்குவரத்து நான்கு நாட்கள் (21ம் தேதி வரை) ரத்து செய்யப்பட்டு நேற்று 22 ம் தேதி தான் இயக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மீண்டும் மலை ரயில் சேவை தடைப்பட்டுள்ளது பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து மலைரயிலில் பயணிக்க ஆர்வமுடன் வந்த சுற்றுலா பயணிகளை ஏமாற்றமடைய வைத்துள்ளது. இன்று காலை மலைரயிலில் ஏறி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் உற்சாகத்துடன் அமர துவங்கிய சுற்றுலா பயணிகள் ரத்து அறிவிப்பால் திரும்பி சென்றனர்.