கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் உள்ள அரசு வனக்கல்லூரி அருகே கோத்தகிரி சாலையில் கம்பீரமாக நடந்து வந்த ஆண் காட்டு யானையான பாகுபலி சிறிது நேரம் அவ்வழியே போக்குவரத்தை மறித்தபடி நடுரோட்டில் நின்று மறியலில் ஈடுபட்டதுடன் சாலையோரம் நின்றிருந்த ஒரு காரை அச்சுறுத்தி அங்கிருந்து விலகி செல்ல வைக்க முற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
மேட்டுப்பாளையம் மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக ஆண் காட்டு யானை யொன்று சுற்றி வருகிறது. இதன் நீண்ட தந்தங்கள் மற்றும் பிரமாண்ட உருவத்தால் இப்பகுதி மக்கள் இந்த யானையை பாகுபலி என பெயரிட்டு அழைத்து வருகின்றனர்.
ஆண்டில் ஒரு சில மாதங்கள் மட்டுமே யார் கண்களுக்கும் தென்படாமல் அடர்ந்த காட்டுக்குள் சென்று விடும் பாகுபலி யானை பெரும்பாலும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் உலா வருவதும் அருகில் தென்படும் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதும் இதன் வழக்கமாகி விட்டது..
தொடர்ந்து பல ஆண்டுகளாக மேட்டுப்பாளையம் பகுதியிலேயே சுற்றி வருவதால் இதனை கும்கி யானைகளின் உதவியுடன் பிடித்து இடமாற்றம் செய்ய வனத்துறை எடுத்த முயற்சிகள் எதுவும் பாகுபலியிடம் பலிக்கவில்லை..பாகுபலி தொடர்பான வனத்துறை அனைத்து முயற் சிகளும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன.
இந்நிலையில், நேற்று வனப் பகுதியில் இருந்து வெளியேறிய யானை மேட்டுப்பாளையம் -கோத்தகிரி சாலையை கடந்து மறுபுறமுள்ள வனப்பகுதிக்குள் செல்வதற்காக முயன்றது. அப்போது இதனை வேடிக்கை பார்க்க சாலையோரம் நின்றிருந்த ஒரு காரை அங்கிருந்து விலகி செல்ல எச்சரிக்கும் விதமாக லேசாக முட்டி அச்சுறுத்தியது.
பின்னர் சாலையில் கம்பீரமாக நடக்க துவங்கிய யானை திடீரென சாலையின் நடுவே சிறிது நேரம் நின்று வாகன போக்குவரத்தை மறித்தது. இதன் பின்னர் சாலையில் இருந்து விலகி சென்ற பாகுபலி அருகிலிருந்த வனப்பகு திக்குள் சென்று மறைந்தது.
இச்சம்பவத்தால் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் சுமார் இருபது நிமிடங்கள் போக்குவரத்து தடைபட்டதோடு பரபரப்பான சூழல் நிலவியது. வனத்தினுள் வறட்சியான சூழல் நிலவுவதால் யானைகள் தண்ணீர் தேடி வனம் சார்ந்த சாலைகளை கடந்து செல்ல துவங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் பாதுகாப்புடன் வாகனங்களை இயக்க வலியுறுத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தை அவ்வழியே சென்ற சிலர் படமெடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.