உலக பாரம்பரிய சின்னமான நூற்றாண்டு பழமை வாய்ந்த மலைரயில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் இருந்து உதகைக்கு தினசரி இயக்கப்பட்டு வருகிறது.
உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் பெரிதும் கவரும் இம்மலை ரயில் மழை காலங்களில் இதன் பாதையில் ஏற்படும் மண் சரிவுகளால் சரிவர இயங்க இயலாமல் அடிக்கடி தடைபட்டு நிற்பதும் இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைவதும் தொடர்கிறது.
கடந்த 3 ம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக மலைரயில் கடந்து செல்லும் மலைப்பாதையில் கல்லார் ரயில் நிலையம் முதல் அடர்லி ரயில் நிலையம் வரை பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டதால் கடந்த 4 ம் தேதி முதல் 7 ம் தேதி வரை என 4 நாட்கள் மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டு நேற்று 8 ம் தேதி தான் மீண்டும் போக்குவரத்து துவங்கியது.
இந்நிலையில், மேட்டுப்பாளையம் பகுதியில் நேற்றிரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மலைரயில் தண்டவாள பாதையில் மண் அரிப்பு ஏற்பட்டதால் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் இன்று காலை வழக்கம் போல் காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட நீலகிரி மலைரயில் கல்லார் ரயில் நிலையம் வரை சென்ற நிலையில் தண்டவாளத்தின் அடியில் ஏற்பட்டிருந்த மண் அரிப்பு காரணமாக மேற்கொண்டு பயணிக்க இயலாமல் மீண்டும் மேட்டுப்பாளையம் கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து இன்று மலைரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ள ரயில்வே நிர்வாகம் இருப்பு பாதை சீரமைப்பு பணிகளை தொடங்கவுள்ளனர்.