fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி மாநகராட்சி உரக்கிடங்கில் 60 ஏக்கர் பரப்பளவில் 66,000 மரக்கன்றுகள் நடுவதை கனிமொழி எம்.பி....

தூத்துக்குடி மாநகராட்சி உரக்கிடங்கில் 60 ஏக்கர் பரப்பளவில் 66,000 மரக்கன்றுகள் நடுவதை கனிமொழி எம்.பி. துவக்கி வைத்தார்

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் உள்ள மாநகராட்சி கலவை உரக்கிடங்கில் இன்று (27ம் தேதி) தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் இணைந்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் சமூகப் பொறுப்பு நிதியுதவியுடன் சமூக காடு வளர்ப்பு திட்டத்தின்கீழ் ரூ.93 லட்சம் செலவில் 60 ஏக்கர் பரப்பளவில் 66,000 பலன் தரும் மரக்கன்றுகள் மற்றும் கால்நடை தீவனப்பயிர் நடும் விழா நடந்தது.

பாராளுமன்ற உறுப்பினர் கனி மொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, மேயர் பெ.ஜெகன் ஆகியோர் முன்னிலையில் மரக்கன்று நட்டுவைத்து, மரக்கன்றுகள் நடும் பணிகளை துவக்கி வைத்தார். இவ்விழாவில், கனிமொழி கருணாநிதி பேசும்போது தெரிவித்ததாவது:

தூத்துக்குடி நகரின் நீர் மேலாண்மையை மேம்படுத்தும் விதமாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைப்புகள் அமைக்கப்பட்டு சேகரிக்கப்படும் கழிவு நீர் தருவைகுளம் கலவை உரக்கடங்கில் அமையப்பெற்ற சுமார் 28 எம்.எல்.டி கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. இந்த நீரினை திறம்பட பயன்படுத்தும் விதமாகவும், இயற்கைச் சூழலை மேம்படுத்தும் விதமாகவும் அதிகப்படியான மரங்களை நட்டு பராமரிக்க திட்டமிடப்பட்டதன் அடிப்படையில் இதுவரையிலும் சுமார் 50,000 மேற்பட்ட மரங்கள் நடப்பட்டுள்ளன.

தற்போது, கூடுதலாக 60 ஏக்கர் பரப்பளவில் தூத்துக்குடி மாநகராட்சி, மாவட்ட வனத்துறை மற்றும் தூத்துக்குடி விமான நிலைய ஆணையரகம் இணைந்து விமான நிலைய ஆணையரகத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூபாய் 93 லட்சம் செலவில் 60 ஏக்கர் நிலப்பரப்பில் 60,000 மரக்கன்றுகள் மியாவாக்கி என்ற அடர் காடுகள் முறையில் நடப்படுகிறது.

மேலும் மாநகராட்சி சார்பாக பலன் தரும் மரங்களை நடுவதற்கு உத்தேசித்து ஒரு ஏக்கர் பரப்பளவில் இனிப்பு புளி, நாட்டுப்புளி, சிவப்பு புளி, குடம் புளி, கொடுக்காப்புளி போன்ற பல்வேறு வகையான புளிய மரங்களும் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் ஆண்டுதோறும் பறவைகளுக்கு பயன்படும் வகையில் ஆல மரங்களும் கால் நடைகளுக்கு ஏற்படும் தீவன பற்றாக்குறையை போக்கி தரமான தீவனங்கள் ஆண்டுதோறும் கிடைக்க வழிவகை செய்யும் விதத்திலும் பொதுமக்களுக்கு நல்ல சத்தான பால் கிடைக்கும் வகையிலும் மாட்டுத்தீவனம் உற்பத்தி செய்து நியாயமான விலையில் விற்பனை செய்யவும் உத்தேசித்து சோதனை முயற்சியாக ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கோவை வேளாண் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மையத்தால் பரிந்து ரைக்கப்பட்டுள்ள அதிகப்படியான புரதச்சத்தும் குறைந்த அளவு கழிவுகளை உடைய கோ எஃப் எஸ் 29 என்ற ரக மாட்டுத்தீவனம் விதைக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் போது, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார், மாவட்ட வன அலுவலர் மு.மகேந்திரன், தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் ஆர்.ராஜேஷ், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் செ.ஜெனிட்டா, மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ்குமார், சரவணகுமார், முருகேசன், வைதேகி, சுப்புலட்சுமி, ஜெயசீலி, அரசு அலுவலர்கள், காமராஜர் கல்லூரி நாட்டு நலத்திட்ட பணி மாணவர்கள், வீ கேன் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்தினர் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img