கடந்த 2019 இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. சீனா மட்டுமின்றி உலகின் அனைத்து நாடுகளையும் இது ஒரு வழி செய்துவிட்டது.
மாஸ்க், லாக் டவுன் என அந்த சமயம் நாம் பட்ட இடர்பாடுகள் ரொம்பவே அதிகம். அதில் இருந்து மீண்டு வரவே நமக்கு சில ஆண்டுகள் வரை ஆனது. இப்போது நாம் கொரோனாவில் இருந்து மீண்டாலும் அது ஏற்படுத்திய பொருளாதார பாதிப்புகள் இன்னும் கூட ஆங்காங்கே தொடர்கிறது.
இதற்கிடையே சுமார் 5 ஆண்டுகள் கழித்து சீனாவில் இப்போது மீண்டும் மர்ம நோய் பரவத் தொடங்கியுள்ளது. அங்குக் கடந்த மாதம் இறுதியில் திடீரென பலருக்குச் சுவாச நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவை போலவே புத்தாண்டு சமயத்தில் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது கொரோனாவை போல ஒரு பெருந்தொற்றை ஏற்படுத்திவிடுமோ என்ற மக்களின் அச்சமே அதற்குக் காரணம்.
இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை இதன் முக்கிய அறிகுறியாக உள்ளது. மூச்சுக் குழாய் அழற்சி பாதிப்பும் கூட ஏற்படுவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் இந்த மர்ம நோய் பரவலுக்கு இடையே இந்திய அரசின் மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
அதாவது நமது நாட்டில் சுவாச மற்றும் பருவகால காய்ச்சல் பாதிப்புகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் சர்வதேச அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், நாட்டில் உள்ள சூழலைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து, தகவலைச் சரிபார்த்து அதற்கேற்ப தேவையான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பரவி பல லட்சம் உயிர்களை பறித்த கொரோனா தொற்றை அழித்தொழிப்பதில் இந்தியா பெரும்பங்கு வகித்தது. தடுப்பூசிகளை விரைவாகக் கண்டுபிடித்து அதனை பெருமளவில் உற்பத்தி செய்து உலக நாடுகளுக்கெல்லாம் அனுப்பியது. தடுப்பூசிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளால் கொரோனாவை இந்தியா ஓரங்கட்டியது.
சமீபத்தில் குரங்கம்மை என்ற கொடிய நோய் இந்தியாவிற்குள் நுழைந்தது. அதனை பரவ விடாமல் தடுத்த இந்தியா, ஹெச்.எம்.பி.வி நோய் தொற்றையும் நாட்டிற்குள் நுழைய விடாமலேயே துரத்தியடிக்க முனைப்புடன் களமிறங்கி விட்டது.
ஹெச்.எம்.பி.வி வைரஸ் பாதிப்பிற்கு இதுவரை தடுப்பூசியும் இல்லை என்பது சற்று கவலையளிப்பதாக இருக்கிறது. ஆனாலும், எல்லோரும் அரசின் வழிகாட்டுதல்களை கடைபிடித்து வருமுன் காக்க தயாராவோம்!