நாமக்கல் மாவட்டம், கொண்டப்ப நாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கரடு புறம்போக்கில், அனுமதியின்றி கற்களை வெட்டி எடுப்பதாக புகார் வந்தது. இதையொட்டி கடந்த பிப்ரவரி 19ம் தேதி, நாமக்கல் கோட்டாட்சியர் பார்த்தீபன் தலைமையிலான வருவாய்த்துறையினர் குவாரியை ஆய்வு செய்தனர்.
அப்போது, கல்குவாரியில் நிறுத்தப்பட்டிருந்த பாறைகளை உடைக்கும் இயந்திரங்கள் உட்பட 23 வாகனங்களை பறிமுதல் செய்தனர். சட்ட விரோதமாக கற்களை வெட்டி எடுத்ததாக 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர்.
இதற்கிடையே, சட்டவிரோதமாக இயங்கிய கல் குவாரி குறித்து, அரசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை எனக்கூறி, கொண்டம நாயக்கன்பட்டி வி.ஏ.ஓ. ஜான்பாஸ்கோ, விட்டமநாயக்கன் பட்டி வி.ஏ.ஓ. கோகிலா ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து நாமக்கல் கோட்டாட்சியர் பார்த்தீபன் உத்தரவிட்டார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த மாவட்டம் முழுவதும் உள்ள வி.ஏ.ஓ.,க்கள், குவாரி விவகாரத்தில் தங்கள் மீது தவறு இல்லை, சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யவேண்டும். எனக்கோரி, 2 நாட்களாக ஆர்டிஓ அலுவலகம் முன்பு, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்.டி.ஓ., முன்னிலையில், வி.ஏ.ஓ., மற்றும் வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் பேச்சு வார்த்தை நடத்தினர்.அதில், உடன்பாடு ஏற்பட்டது. தொடர்ந்து, வி.ஏ.ஓ.,க்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
மேலும், கொண்டம நாயக்கன்பட்டி வி.ஏ.ஓ. ஜான்பாஸ்கோ அக்கியம்பட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.அங்கு பணியாற்றிய சரவணன், கொண்டம நாயக்கன்பட்டிக்கு மாறுதல் செய்யப்பட்டார். மேலும், விட்டமநாயக்கன்பட்டி வி.ஏ.ஓ., கோகிலா மீண்டும் அதே கிராமத்தில் வி.ஏ.ஓ.,வாக பணியாற்ற அனுமதிக்கப்பட்டார். அதற்கான உத்தரவை, ஆர்.டி.ஓ., பார்த்தீபன் வெளியிட்டார். வி.ஏ.ஓ.,க்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, 2 நாட்களாக நடந்த காத்திருப்பு போராட்டத்தை வி.ஏ.ஓ.,க்கள் விலக்கிக்கொண்டு பணிக்கு திரும்பினர்.