மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான குவான் கிடோ போட்டியில் மூன்று பிரிவுகளிலும் 3 தங்க பதக்கங்கள் பெற்று கோவையை சேர்ந்த பள்ளி மாணவி பவித்ரா அசத்தியுள்ளார்.
கோவை இரத்தினபுரி பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சிவக்குமார் என்பவரது மகள் பவித்ரா. சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள சிந்தி வித்யாலாயா பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவி பவித்ரா அண்மையில் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நடைபெற்ற ஆறாவது தேசிய அளவிலான குவான்கிடோ சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு அணி சார்பாக கலந்து கொண்டார்.
இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் இருந்தும் தகுதி பெற்ற மாணவ, மாணவியர்கள் 600 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இதில், செமி கான்டக்ட், ஃபுல் கான்டக்ட் ஃபைட்டிங் ,வெப்பன் ஆகிய மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
இந்நிலையில் கோவை திரும்பிய மாணவி பவித்ராவிற்கு அவரது பயிற்சியாளர் பிராங்ளின் பென்னி,மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாக்கியலட்சுமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
ஆட்டோ ஓட்டுனரின் மகளாக எளிமையான குடும்பத்தை சேர்ந்த மாணவி பவித்ரா அடுத்து அர்மேனியா நாட்டில் நடைபெற உள்ள குவாங்கிடோ போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.