மத்தியிலும், மாநில சட்டமன்றங்களிலும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும் விதமாக, “ஒரே நாடு ஒரே தேர்தல்” எனும் திட்டத்தை நாட்டில் அமல்படுத்த மத்திய பாஜக முயற்சி செய்து வருகிறது. இதே திட்டத்தின் கீழ் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் குறிப்பிட்ட இடைவெளியில் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்த “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை பாஜக கடந்த முறை அதனை முக்கிய வாக்குறுதியாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது. தேர்தலுக்கு பின்னர் நடந்த சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை அமலுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அடிக்கடி தேர்தல்கள் நடத்தப்படுவதால் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடைகள் உருவாகின்றன எனவும் தெரிவித்தார்.
இதற்கிடையில், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், “ஒரே நாடு ஒரே தேர்தல்” நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்ய மத்திய அரசு ஒரு குழு அமைத்து இருந்தது. அந்த குழு கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட அறிக்கையில், 2029இல் ஒரே நாடு ஒரே திட்டத்தை அமல்படுத்த சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிவித்து இருந்தது.
இன்றைய சூழலில், “ஒரே நாடு ஒரே தேர்தல்” கோரிக்கை குரல் இந்திய அரசியலில் மீண்டும் எதிரொலிக்கத் தொடங்கி இருக்கிறது. இந்த திட்டத்தை அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே நிறைவேற்றுவதில் பாஜக உறுதிபூண்டுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்ததாக தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
பாஜக கடந்த முறை தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது போல இந்த முறை ஆட்சியமைத்து இருந்தால் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தினை அமல்படுத்த தீவிரமாக களமிறங்கி இருக்கும். தற்போதைய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் சாத்தியமே இல்லை என்று கூறி இந்தியா கூட்டணி இத்திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கிறது.
இத்திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் குறைந்தபட்சம் அரசியலமைப்பில் 5 திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான அரசியலமைப்பு திருத்தங்களை மக்களவையிலோ, மாநிலங்களவையிலோ கொண்டு வந்து நிறைவேற்றும் அளவுக்கு பிரதமர் மோடி வசம் இருக்கும் எம்பிக்கள் பலம் போதுமா? என்ற கேள்வியும் எழுகிறது.
ஏனென்றால் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் முக்கிய பங்கு வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சி இன்னும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு உடன்படவில்லை.
நாடாளுமன்றம் & சட்டசபைகளுக்கு தற்போதைய தேர்தல் நடத்தும் முறை தொடர்ந்தாலும் சரி, ஒரே நேரத்தில் நடத்தினாலும் சரி… என்னவோ பண்ணிக்கொள்ளுங்கள்
என்பதாகத் தான் வாக்காளர்களின் எண்ண ஓட்டம் இருக்கிறது.
பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி இந்த திட்டத்திற்கு பச்சைக் கொடி காட்டுகிறது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி சிவப்புக் கொடி காட்டி தன் எதிர்ப்பை தெரிவிக்கிறது.
100 சதவீதம் வாக்காளர்களும் தங்கள் கை விரலில் மையிட வேண்டும் என்பதையே நோக்கமாக இந்திய தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. ஒரே முறை வாக்களித்தாலும் சரி, இரு முறை வாக்களித்தாலும் சரி, வருகின்ற தேர்தல்களில் வாக்களிப்போர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்க வேண்டும் என்பது தான் முக்கியம்!