fbpx
Homeபிற செய்திகள்ஒரே நாடு ஒரே தேர்தலும் ஆட்சிக் கலைப்பு சிக்கலும்!

ஒரே நாடு ஒரே தேர்தலும் ஆட்சிக் கலைப்பு சிக்கலும்!

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்குப் பச்சைக்கொடிகாட்டி, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அளித்தப் பரிந்துரைக்கு அதிமுக உள்ளிட்ட 32 கட்சிகள் ஆதரவையும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 15 கட்சிகள் எதிர்ப்பையும் தெரிவித்திருந்தன. 15க்கும் மேற்பட்ட கட்சிகள் எந்த நிலைப்பாடும் எடுக்காமல் கருத்து இல்லை எனக் கூறி விட்டன.

தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருப்பதால், வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை. இது தொடர்பான சில சட்டத்திருத்தங்களையும் நிறைவேற்ற வேண்டியுள்ளது.

அப்போது நாடாளுமன்றத்தில் கடுமையான எதிர்ப்பை பாஜக அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதையெல்லாம் மீறி அனைத்தும் சுமூகமாக முடிந்தால் 2029-ல் மக்களவைத் தேர்தலுடன் இந்தியா முழுவதிலும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெறும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அமலாகும்பட்சத்தில் என்னனென்ன சிக்கல்கள் ஏற்படும்? இந்திய அரசியலில் ஏற்படப்போகும் தாக்கங்கள் என்னவாக இருக்கும்? என்பது தான் இப்போது நாடுமுழுவதும் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.
கடந்த வருடம் (2023) பத்து மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

இம்மாநிலங்களில் வரும் 2028-ல் ஆட்சி முடிவுக்கு வந்த பின் அவற்றுக்கு 2029-ல் புதிய திட்டத்தின் கீழ் தேர்தல் நடைபெறும். அதுவரை அந்த மாநிலங்களில் காபந்து அரசுகள் தொடரவும் அல்லது குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படவும் வாய்ப்புள்ளது.

இந்தப் பட்டியலில் இமாச்சலபிரதேசம், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், கர்நாடகா, தெலங்கானா, மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, மிசோரம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

அடுத்து வரும் 2026-ல் தமிழ்நாடு, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 2027-ல் உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேர்தல் வருகிறது. இந்த ஆண்டுகளில் அமையும் ஆட்சிகளின் ஆயுட்காலம் மூன்று ஆண்டுகளுக்குள் சுருங்கிப்போகும்.

டெல்லி சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இங்கு அமையும் ஆட்சி, நான்கு ஆண்டுகளில் முடியும் சூழல் உள்ளது.

எனினும், ஒரே நாடு ஒரே தேர்தலால் நடப்பு ஆண்டில் தேர்தல் முடித்த ஒடிசா, ஆந்திரா, சிக்கிம் மற்றும் அருணாச்சலபிரதேசம், தற்போது தேர்தல் நடைபெறும் ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர், இனி தேர்தல் நடைபெற உள்ள மகராஷ்டிரா, பிஹார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை.

சட்டப்பேரவை எம்எல்ஏக்கள் மூலமாக மாநிலங்களவை எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுகின் றனர். இதனால் மாநிலங்களவையில் 2029-க்கு சற்றுமுன்பாக காலியாகும் இடங்களில் புதிய எம்.பி.க்கள் தேர்வுசெய்யப்படுவது சற்று தாமதமாக வாய்ப்புள்ளது.

இப்படியாக, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை கொண்டு வரும்போது ஏற்படும் எதிர்விளைவுகளால், பல மாநில அரசுகள் பெரும் பின்னடைவை சந்திக்கும். அப்போது இந்தியா கூட்டணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவிக்கும். அது அரசியல் பூகம்பமாக விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புள்ளது.

ஒரு பெரிய திட்டத்தைச் செயல்படுத்தும்போது பாதிப்புகளும் பெரிய அளவில்தான் இருக்கும். அதனை மத்திய அரசு எப்படி சமாளிக்கப்போகிறதோ தெரியவில்லை.
பொறுத்திருந்து பார்ப்போம்!

படிக்க வேண்டும்

spot_img