நீலகிரி மாவட்டத்தில், உதகை சேரிங்கிராஸ் பூமாலை வணிக வளாகத்தில், மாநில ஊரக நகர்புற வாழ் வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் ரூ.4.75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மதி சிறுதானிய உணவு அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா குத்து விளக்கேற்றி, திறந்து வைத்து, பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது:
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் 30.03.2023 அன்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு முழுவதும் மதி சிறுதானிய உணவு அங்காடி அமைக்கப்படும் என அறிவிப்பு செய்ததை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் சிறுதானிய உணவு அங்காடி அமைத்து விற்பனை செய்திட ரூ.4.75 லட்சம் மதிப்பீட்டில் மதி சிறுதானிய உணவு அங்காடி அமைக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று திறந்து வைக்கப்பட்ட இந்த மதி சிறுதானிய உணவு அங்காடியானது வளரும் மங்கையர் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் நடத்தப்படுகிறது. இந்த சிறுதானிய உணவு அங்காடியில் பாரம்பரிய உணவு தானியங்களான கம்பு, கேழ்வரகு, சோளம், சாமை, திணை, வரகு மற்றும் குதிரை வாளி போன்ற சிறுதானியங்களை கொண்டு உணவு வகைகள் சமைத்து பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
வளரும் மங்கயைர் மகளிர் சுய உதவிக்குழுவினர் சிறுதானிய உணவு தயாரிப்பில் கின்னஸ் சாதனை படைத்தவர்கள் ஆவர். இந்த அங்காடி மூலம் கிடைக்கும் வருமானம் குழுவில் உள்ள 12 உறுப்பினர்களின் வாழ்வாதாரம் உயர்ந்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், என்னுடைய விருப்பம் என்னவென்றால், இனி வருங்காலத்தில் மாவட்ட ஆட்சியரகத்தில் அல்லது வேறு எந்த அரசு அலுவலகத்தில் அலுவலக கூட்டம் நடைபெற்றால் சிறுதானிய உணவு மட்டுமே அங்கு பரிமாற முன் வர வேண்டும். பொதுமக்களும் மறந்துபோன நமது பண்டைய உணவுப் பொருட்களான சிறுதானிய உணவுப்பொருட்களை உட்கொண்டு, உடல் ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சௌந்தரராஜன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) காசிநாதன், துணை இயக்குநர் (வேளாண் வணிகம் (ம) விற்பனை) கிருஷ்ணமூர்த்தி, உதகை நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், உதகை நகரமன்றத் தலைவர் வாணீஷ்வரி, துணைத் தலைவர் ரவிக்குமார், உதகை ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் (எ) மாதன், உதவி திட்ட அலுவலர்கள் ஜெயராணி, முத்து, குமாரவேல், அருண்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜனார்த்தனன், மோகன குமாரமங்கலம் மற்றும் பல்வேறு மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.