அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரி மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம், இறுதி ஆண்டு பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு மாணவிகளை கௌரவிக்கும் வகையில் வருடாந்திர விளக்கு விழாவை நடத்தியது. இதில் சென்னை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் கலைமாமணி கிரிஜா ராமசாமி பங்கேற்று விளக்கேற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.
அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மற்றும் வேந்தர் முனைவர் தி.ச.க. மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கி, இறுதி ஆண்டு மாணவிகளுக்கு உறுதிமொழியை வழங்கினார்.
தலைமை உரையாற்றிய அவர், `பல்லாயிரக்கணக்கான மாணவியருக்குக் கல்விச்செல்வம் கிடைத்திடும் வகையில், பெண்கல்விக் கென சாரதாலயத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர் நம் அய்யா (அவினாசிலிங்கம்) அவர்களின் நோக்கத்திற்கு உறுதுணையாக நின்று இப்பல்கலைக்கழத்தைப் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றவர் நம் அம்மா இராஜம்மாள் பி.தேவதாஸ் அவர்கள்.
இவர்கள் உருவாக்கிய இந்நிறுவ னத்தில் கல்வி பயின்று செல்லும் மாணவிகள் தங்களது கடமையை செவ்வனே செய்ய வேண்டும். எண்ணங்களை உயர்வாகக் கொண்டு விடா முயற்சியோடு உழைத்தால் எதையும் எதிர்க்கொண்டு வெற்றி பெறலாம். சுடரொளி தீபங்கள் போல உங்கள் வாழ்வு ஒளிவீசி மேன்மையுற வேண்டும்` என்று மாணவிகளுக்கு வாழ்த்துக் கூறியும் அறிவுரை வழங்கியும் உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர் கலைமாமணி கிரிஜா ராமசாமி ஆற்றிய சிறப்புரையில், நிகழ்வு முழுவதும் மாணவிகள் பராமரித்த ஒழுக்கத்தைப் பாராட்டினார். “கல்வி என்பது மனிதனில் ஏற்கனவே உள்ள முழுமையின் வெளிப்பாடாகும்“ என்று கூறிய சுவாமி விவேகானந்தரின் சக்திவாய்ந்த வார்த்தைகளை அவர் நினைவு கூர்ந்தார்.
கல்வி என்பது வெறும் அறிவைப் பெறுவது மட்டுமல்ல, அது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் பயணம்; அது ஒருவரின் குணத்தை வடிவமைத்து, வாழ்க்கையைப் பற்றிய ஆழமான புரிதலை ஏற்படுத்தும் என்று அவர் வலியுறுத்தினார். சவால்களை தடைகளாகக் கருதாமல் வெற்றிக்கான படிக்கட்டுகளாகக் கருதி, அவற்றை ஏற்றுக்கொள்ள மாணவிகளை மேலும் ஊக்குவித்தார்.
அறிவு, ஒழுக்கம் மற்றும் விழுமியங்கள் பெற்ற இவ்வேளையில், மாணவிகள் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் உலகில் நடக்க வேண்டும், அதே நேரத்தில் பணிவாகவும், கற்றுக்கொண்ட விழுமியங்களில் நிலைத்திருக்கவும் வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நிகழ்வில் இறுதியாண்டுப் பயிலும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவியர்கள், தொழில்நுட்பக் கல்வி, ஆசிரியர் பயிற்சிக் கல்வி மற்றும் முனைவர்ப்பட்ட மாணவியர்கள் மொத்தம் 2213 பேர் விளக்கேற்றினர்.
முன்னதாக கலை மற்றும் சமூக அறிவியல் பள்ளியின் முதன்மையர் முனைவர் ஷோபனா வரவேற்றார். உதவிப் பேராசிரியர் முனைவர் எஸ்.குருக்னாம்பிகா நன்றி கூறினார்.