fbpx
Homeதலையங்கம்ஜல்லிக்கட்டு வழக்கும் தமிழர்களின் எதிர்பார்ப்பும்!

ஜல்லிக்கட்டு வழக்கும் தமிழர்களின் எதிர்பார்ப்பும்!

பொங்கல் பண்டிகையின்போது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வந்தாலும், மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சர்வதேச அளவில் பெயர் பெற்றது.

காலங்காலமாக நடந்து வந்த பாரம்பரியம் கொண்ட ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடையை நீக்கி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக் கோரி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2017ல் மக்கள் நடத்திய போராட்டங்களை யாரும் மறந்திருக்க முடியாது.

சிகரம் வைத்தாற்போல், சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்ற இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது.

எந்தவொரு அரசியல் கட்சியின் தலைமையும் இல்லாமல், பொதுமக்கள் தானாக திரண்டு நடத்திய இந்த சிறப்புமிக்க போராட்டம் தைப் புரட்சி, மெரீனாப் புரட்சி, இளைஞர்கள் புரட்சி என்று இன்றளவும் பெருமையாக பேசப்படுகிறது. அந்தப் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியால் தான் தற்போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் காளைகள் பல்வேறு விதங்களில் கொடுமைப்படுத்தப்படுவதாக கூறி, இந்த போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என பீட்டா தன்னார்வ அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடுத்துள்ளது.

நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.இரு தரப்பு வாதங்களிலும் அனல் பறக்கிறது. பண்பாடு, பாரம்பரியம் சார்ந்த ஜல்லிக்கட்டு தகுந்த விதிமுறைகளோடு நடத்தப்படுகிறது என்பதை தமிழக அரசு வழக்கறிஞர் கபில் சிபல் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடர்கிறது. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை தமிழர்களிடம் இருக்கிறது. ஏனென்றால் ஜல்லிக்கட்டு ஓர் வீர விளையாட்டு. இதில் பங்கேற்போரிடமும் பார்ப்பவர்களிடமும் வீரத்தை வளர்க்கும் பாரம்பரிய போட்டி.

இளமையிலேயே மனதில் வீரத்தை வளர்க்க வேண்டும். இதுபோன்ற வீரம் இருக்கும் இளைஞர்கள் தானே நாட்டைக் காக்கும் வீரமிக்க வீரர்களாக உருவெடுக்கிறார்கள். மனதில் அச்சம் இருந்தால் இது சாத்தியமாகுமா?
ஜல்லிக்கட்டு காளைகளின் இலக்கு வெற்றி.

அவைகளை அடக்கக் களமிறங்கும் வீரர்களின் இலக்கும் வெற்றி தான். எனவே தமிழர்களின் வெற்றிக்கு ஊக்கம் தரும் ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

இதனைக் கருத்தில் கொண்டே, பொங்கல் பண்டிகையையொட்டி இந்த ஆண்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை காண தமிழ்நாட்டுக்கு வருமாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழக அரசின் சார்பில் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை நெருங்குகிறது. தமிழர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையிலான தீர்ப்பு வரும்; ஜல்லிக்கட்டு நடக்கும். காத்திருப்போம்!

படிக்க வேண்டும்

spot_img