fbpx
Homeபிற செய்திகள்ஆறு மதத் தலைவர்களுடன் மசூதியில் போப் ஆண்டவர்!

ஆறு மதத் தலைவர்களுடன் மசூதியில் போப் ஆண்டவர்!

ஆசிய பசிபிக் நாடுகளில் போப் பிரான்சிஸ் 12 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி தனது சுற்றுப்பயணத்தின் மூன்றாவது நாளில் இந்தோனேசியா சென்றடைந்த அவர், தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதியான இஸ்திக்லால் மசூதிக்கு சென்றார்.

அங்கு மசூதியின் இமாம் ஆன நசுருதீன் உமர் போப் பிரான்சிஸை வரவேற்றார். அங்கு இந்தோனேசிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆறு மதங்களைச் சேர்ந்த (புத்த மதம், இஸ்லாம், இந்து மதம், கத்தோலிக்க மதம், புரோட்டஸ்டன்ட் மதம், கன்ஃபூசிய மதம்) தலைவர்களும் குழுமி இருந்தனர்.

அங்கே போப் பிரான்சிஸ் பேசுகையில் “நாம் அனைவரும் சகோதரர்கள், அனைவரும் கடவுளை நோக்கிச் செல்லும் வழியில், வேற்றுமைகள் இருந்தாலும் ஒற்றுமையுடன் முன்னேற வேண்டும். போர்கள் போன்ற மனிதகுலத்தின் எதிர்காலத்தை அச்சுறுத்தும் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பொறுப்பை நாம் ஏற்கவேண்டும்” என்றார்.

மதத்தின் அடிப்படையில் பல நாடுகளில் மோதல், கலவரம் நடந்து வருவதை இந்த உலகம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறது. அரசியலிலும் மதங்கள் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. சிறுபான்மை மதத்தினர் மீது பெரும்பான்மை மதத்தினர் தாக்குதல் நடத்துவதை காண்கிறோம்.

இவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும் என்பதற்காகத் தான், எல்லா மதத் தலைவர்களும், அனைத்து மதங்களிலும் கடவுளைத் தேடும் வழிகள் வேறுபட்டிருந்தாலும் சென்றடையும் இலக்கு ஒன்றே. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என இடைவிடாது போதிக்கின்றனர்.

குறிப்பாக வேற்றுமையில் ஒற்றமை என்பது இந்தியாவின் தாரக மந்திரம். இந்த மந்திரம் உலகம் முழுவதும் பலித்திட வேண்டும்; அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நற்காரியத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் முனைப்புடன் செயல்பட்டு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

உலக நலனுக்காக, அமைதிக்காக, ஒருமைப்பாட்டுக்காக அவர் மேற்கொண்டிருக்கும் புனிதப்பயணம் பாராட்டத்தக்கது; போற்றுதலுக் குரியது!

படிக்க வேண்டும்

spot_img