ரயில் நிலையங்கள் மற்றும் ஓடும் ரயில்களில் பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், கோவையில் போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
கோவை -திருப்பதி ரயிலில் பயணித்த கர்ப்பிணியை, வாலிபர் ஒருவர் எட்டி உதைத்து கீழே தள்ளிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவ்வழக்கில் வேலூர் மாவட்டம் கே.வி குப்பத்தைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஓடும் ரயில்களில் சீண்டலுக்கு உள்ளாகும் பெண்கள், புகார் அளிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு ரயில்வே போலீஸ் டி.ஜி.பி வன்னிய பெருமாள் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் பெண்களுக்கான பாதுகாப்பைத் தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக தனி குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
கோவையைப் பொருத்தவரை இங்குள்ள சென்ட்ரல் ரயில் நிலையம், போத்தனூர், வடகோவை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில், டி.எஸ்.பி பாபு தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், சட்ட உதவி மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், குழந்தைகள் உதவி மைய ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து, ரயில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்கள் நடந்தால் அதனை எப்படி எதிர்கொள்வது? எந்த எண்ணில் புகார் அளிப்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து ரயில் நிலையத்திலிருந்த பெண்கள் மத்தியில் எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து, விழிப்புணர்வு வாசகங்கள், போலீசாரின் உதவி எண்ணுடன் கூடிய நோட்டீசை பயணிகளுக்கு வழங்கி, அதனை ரயில் மற்றும் நடைமேடைகளிலும் ஒட்டினர்.
கடந்த இரண்டு நாட்களாக இந்த விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வரும் போலீசார், பொதுமக்கள் நலன் கருதி தொடர்ந்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், காவல் ஆய்வாளர் மீனாட்சி, உதவி ஆய்வாளர் கவிதா, ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் கிரீஸ் வழக்கறிஞர்கள் கவுதமி, கீர்த்தன, ஏஞ்சலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.