fbpx
Homeபிற செய்திகள்குழந்தை திருமணம் தடுக்க கடும் நடவடிக்கை தேவை!

குழந்தை திருமணம் தடுக்க கடும் நடவடிக்கை தேவை!

தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வரும் செய்திகள் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. 2023ம் ஆண்டு 1,054 குழந்தை திருமணங்களும், 2024ம் ஆண்டு 1,640 குழந்தை திருமணங்களும் நடைபெற்றுள்ளதாக ஆர்டிஐ தெரிவிக்கிறது.

குறிப்பாக ஈரோடு, திருநெல்வேலி, பெரம்பலூர், கோவை, திண்டுக்கல், நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த வேண்டிய விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் சட்ட நடவடிக்கைகளையும் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டிய அவசியத்தையே இந்த புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன.

கிராமப்புறங்களில் பஞ்சாயத்து அளவிலான கண்காணிப்பு குழுக்களும் மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையிலான குழந்தை திருமணத் தடுப்பு குழுவும் சிறப்பு கவனம் செலுத்தி செயல்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

மேலும் குழந்தை திருமணங்கள் நடப்பதை கண்காணிக்க வேண்டிய மாநில குழந்தைகள் ஆணையம் தலைவர் இல்லாமல் முடங்கி கிடக்கிறது. இதனால் அதிகாரிகளிடையே கடமையை நிறைவேற்றுவதில் சுணக்கம் காட்டும் போக்கு நிலவுகிறது. எனவே, குழந்தைகள் ஆணையத்துக்கு உடனடியாக தலைவரை நியமிக்க வேண்டும்.

குழந்தை திருமணங்கள் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவது வேதனை தருவதோடு அடியோடு தடுக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

குழந்தை திருமணத்துக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஒருபுறமிருந்தாலும் மறுபுறம் கைது போன்ற சட்ட நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்ட வேண்டியதே தற்போதைய முக்கிய தேவை. தொய்வில்லா சட்ட நடவடிக்கைகளே இதுபோன்ற சமூகப் பிரச்னைகளுக்கு தீர்வைத் தரமுடியும்!

படிக்க வேண்டும்

spot_img