ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் அரசிற்கு விதைப்பண்ணை அமைக்க பயிற்சி பெற்ற 519 விவசாயிகள் உள்ளனர்.
தரிசு நிலத்தில் தொகுப்பு மரக்கன்றுகள் நட்டு பராமரித்தால் 20 ஆண்டுகளில் மிகப்பெரிய லாபத்தை விவசாயிகள் அடையலாம்.
தோட்டக்கலைத்துறையின் மூலம் அரசின் மாநியத்துடன் சொட்டு நீர் பாசன திட்டத்தில் தர்பூசணி செடி வளர்த்து அதிக லாபம் பெறலாம்.
வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத் துறையின் மூலம் அரசின் மானியத்துடன் விவசாயம் செய்து வரும் விவசாயிகளை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா நேரடியாக செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டு செய்தியாளர்களுக்கு விவரித்தார்கள்.
தொடர்ந்து அவர் அரக்கோணம் வட்டம் பாராஞ்சி ஊராட்சி பெரிய மோட்டூர் கிராமத்தைச் சார்ந்த வினோத்குமார் என்கிற வேளாண்மைத்துறையின் பதிவு பெற்ற விவசாயி 2.5 ஏக்கர் பரப்பளவில் உளுந்து விதை உற்பத்தி செய்து வருவதை நேரடியாக நிலத்திற்கு சென்று பார்வையிட்டு விவசாயிடம் கேட்டறிந்து செய்தியாளர்களுக்கு விவரித்தார்.
ரக்கோணம் வட்டம் பாராஞ்சி ஊராட்சியைச் சார்ந்த விவசாயி
மாவட்ட ஆட்சியரிடம் கூறியதாவது:
உளுந்து விதைப்பண்ணை அமைத்தால் ஒரு ஹெக்டேரில் 70 நாட்களில் 1 லட்சம் வருமானம் பெறலாம். சாதாரணமாக உளுந்து பயிரிட்டு லாபம் பெறுவதை விட அரசுக்கு விதைப்பண்ணை விவசாயிகளாக பதிவு செய்து கொண்டு சான்று பெற்ற விதைகள் உற்பத்தி செய்து கொடுப்பதால் அதிக லாபம் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வேளாண்மைத்துறையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நெல், மணிலா, பயிர் வகைகள் மற்றும் சிறுதானிய பயிர்களுக்காக சான்று பெற்ற விதைகள் உற்பத்தி செய்வதற்கென்றே பயிற்சி பெற்ற விதைப்பண்ணை விவசாயிகள் சுமார் 519 நபர்கள் உள்ளனர்.
இவர்கள் மூலம் சான்று பெற்ற விதை நெல். 410 மெட்ரிக் டன், பயறு வகை பயிர்களான உளுந்து, பச்சைபயிறு, காராமணி, துவரை ஆகியவை 50 மெட்ரிக் டன், மணிலா 40 மெட்ரிக் டன், மற்றும் சிறுதானிய பயராகிய ராகி 10 மெட்ரிக் டன் விதைகள் ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு ஒவ்வொரு பருவத்திற்கு ஏற்றவாறு வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைத்து மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தரமான விதைகளை உற்பத்தி செய்வதை கண்காணிக்கும் வகையில் விதை சான்றிதழ் துறையின் மூலம் விதைப்பு முதல் தகுதியுள்ள சான்று பெற்ற விதைகளாக மாறுகின்ற வரையில் ஒவ்வொரு நிலையிலும் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, விவசாயிகள் உளுந்து வருமானம் பெற்று வாழ்வாதாரத்தை உயர்த்த விதைப்பண்ணை விவசாயிகளாக தங்களை பதிவு செய்து கொண்டு பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.
குறைந்த நீர் தேவை உள்ள குறுகிய கால சாகுபடியில் செலவினம் குறைந்த பயிர்களாகிய உளுந்து, பச்சைபயிறு போன்ற பயிர்கள் விதை பண்ணை அமைத்து சாகுபடி செய்து அரசுக்கு வழங்கும் பட்சத்தில் கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்து கொள்வதோடு கூடுதலாக உற்பத்தி மானியமும் பெறலாம்.
மேலும் விவரங்கள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி விவசாயிகள் பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
தோட்டக்கலைத் துறையின் மூலம் பிரதான் மந்திரி சொட்டுநீர் பாசன திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் ஆண்டில் 400 ஏக்கர் இலக்கில் 321 ஏக்கர் பரப்பளவில் சொட்டுநீர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் அரசின் மானியமாக ரூ.2.49 கோடி 353 விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. குறைவான நீரைக் கொண்டு விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களை உற்பத்தி செய்து பயன்பெற வேண்டும். அரசின் முழு மானியம் விவசாயிகளுக்கு வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது.
தமிழ்நாடு பசுமை போர்வை இயக்கம் சார்பில் கடந்த 3 ஆண்டுகளில் தரிசு நிலங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவரும் வகையில் 2550 விவசாயிகளுக்கு ரூ.5.30 இலட்சம் மகாகணி, தேக்கு, செம்மரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் விவசாய நிலங்கள் மற்றும் வரப்பு ஓரங்களில் நட்டு பராமரிக்க வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வுகளில் திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஜெயசுதா, துணை இயக்குனர் வேளாண்மை செல்வராஜ், உதவி இயக்குனர்கள் அனுராதா (வேளாண்மை), கார்த்திக் (தோட்டக்கலை), ஒன்றிய குழு தலைவர் நிர்மலா சௌந்தர், நகரமன்ற தலைவர் லஷ்மி பாரி, வோண்மை அலுவலர் முரளி, நகராட்சி ஆணையாளர் கன்னிப்பன், வட்டாட்சியர் ஸ்ரீதேவி, கால்நடை மருத்துவர் மரு.கௌசல்யா மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.