ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் சந்திரகலா தலைமையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து வருவாய்த்துறை, நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை வேளாண்மைத்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மருத்துவத்துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த 247 மனுக்களை கலெக்டர் சந்திரகலா பெற்றுக்குறைகளை கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து, பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான காரணங்களையும் மனுதாரர்களுக்கு வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 31 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.4.65 இலட்சம் மதிப்பீட்டிலான கையடக்க திறன்பேசிகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஜெயசுதா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், சமூக பாதுகாப்பு திட்டம் தனி துணை ஆட்சியர் கீதா லட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுகுமார். நேர்முக உதவியாளர் (நிலம்) கனகராஜ். மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.