சேலம் மாவட்டம், தலை வாசல் வட்டம், மும்முடி கிராமத்தில் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் மூலம் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளில் 9,046 விவசாயிகள் பயன்பெறும் வகையில் 8,621 எக்டர் பரப்பளவில் ரூ.92.19 கோடி மதிப்பீட்டிலான சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனக் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 2024-25ம் ஆண்டிற்கு நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் 3,000 எக்டர் இலக்கு மற்றும் ரூ.28 கோடி நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது.
இதில் 12.12 எக்டர் பரப்பளவில் பணியாணை வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும், சேலம் மாவட்டத்தில் 2023-24ம் ஆண்டில் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ், 5,450 எக்டர் பரப்பளவிற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, ரூ.43.90 கோடி நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது.
இதில் தற்போது 4,031.81 எக்டர் பரப்பளவிற்கு பணியானை வழங்கப்பட்டு, 3,532 எக்டர் பரப்பளவில் 3,819 விவசாயிகள் பயன்பெறும் வகையில், அவர்களது வயல்களில் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனக் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் அதிகபட்சமாக தலைவாசல் வட்டாரத்தில் 852 விவசாயிகளுக்கு 896.13 எக்டர் பரப்பளவில் ரூ.10.56 கோடி மதிப்பீட்டிலான நுண்ணீர் பாசனக்கருவிகள் அமைக்கப்பட்டு பயன்பெற்றுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக ஆத்தூர் வட்டாரத்தில் 546 விவசாயிகளுக்கு 309.34 எக்டர் பரப்பளவில் ரூ.6.20 கோடி மதிப்பீட்டிலான நுண்ணீர் பாசனக் கருவிகள் அமைக்கப்பட்டு பயன்பெற்றுள்ளனர்.
மேலும், கெங்கவல்லி வட்டாரத்தில் 399.8 எக்டர் பரப்பளவிலும், பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் 351.39 எக்டர் பரப்பளவிலும் நுண்ணீர் பாசனக் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சொட்டு நீர்ப்பாசனத்திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமாக ஒரு எக்டருக்கு ரூ.1,35,855/-ம், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமாக ஒரு எக்டருக்கு ரூ.1,05,530/-ம் வழங்கப்படுகிறது.
அதேபோன்று, தெளிப்பு நீர்ப் பாசனம் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமாக ஒரு எக்டருக்கு ரூ.22,524/-ம், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமாக ஒரு எக்டருக்கு ரூ.17,497/-ம் வழங்கப்படுகிறது.
மழைத்தூவான் வழங்கும் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமாக ஒரு எக்டருக்கு ரூ.37,369/-ம், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமாக ஒரு எக்டருக்கு ரூ.29,028/-ம் வழங்கப்படுகிறது.
தலைவாசல் வட்டம், மும்முடி கிராமத்தில் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் மூலம் சொட்டு நீர் பாசனம் அமைத்து மரவள்ளி சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் நிலத்தில் ஆய்வு செய்யப்பட்டது. விவசாயிகள் சொட்டு நீர்ப்பாசனத்தின் மூலம் குறைந்த நீரைக் கொண்டு அதிகப் பரப்பில் பயிர் செய்வதோடு, 75 சதவிகித நீரை இப்பாசனத்தின் மூலம் சேமிக்க முடியும்.
அதேபோன்று, சாகுபடி செலவு குறைந்து அதிக வருமானமும் கிடைக்கும். பயிர் திடமாகவும், ஆரோக்கியமாகவும் வளர்வதோடு வேகமாக முதிர்ச்சி அடையும் வகையில் சொட்டு நீர்ப் பாசனம் அமைகிறது. மேலும், தண்ணீரில் கரையும் உரங்களை நேரடியாகப் பயிருக்கு வேர்ப் பகுதியிலேயே வழங்குவதால், தரமான விளை பொருட்களுடன் அதிக விளைச்சலும் கிடைக்கிறது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிறு, குறு விவசாயி சான்று, அடங்கல், கம்ப்யூட்டர் பட்டா ஆகிய ஆவணங்களுடன் தொடர்புடைய வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்கள் அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண். 1800 425 4444 மூலம் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
மேலும் www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் விவசாயிகள் நேரடியாக பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இச்செய்தியாளர் பயணத்தின் போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி ஆக்ரிதி சேத்தி, வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நீலாம்பாள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.