சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், கருப்பூரில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சூரிய கூடார உலர்த்தியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி செய்தியாளர் பயணத்தின்போது நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.
இந்த ஆய்விற்குப்பின், மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள்.
இத்தகைய திட்டங்களை வேளாண் பெருமக்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்த்திட மாவட்ட நிர்வாகம் முனைப்போடு செயல்பட்டு வருகின்றது. அந்த வகையில், வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் சூரிய கூடார உலர்த்தி அமைக்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தில் கடந்த 3 ½ ஆண்டுகளில் மொத்தம் 27 பயனாளிகளுக்கு ரூ.63.80 லட்சம் மானியத்தில் சூரிய கூடார உலர்த்தி அமைத்துத் தரப்பட்டுள்ளது.
குறிப்பாக, 2024-25-ஆம் நிதியாண்டில் மட்டும் இதுவரை 7 பயனாளிகளுக்கு சூரிய கூடார உலர்த்தி அமைத்துத் தரப்பட்டுள்ளது.
மேலும் 2 பயனாளிகளுக்கு சூரிய கூடார உலர்த்தி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் ஓமலூர் வட்டம், கருப்பூரில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் ரூ.3.50 லட்சம் மானியத்துடன் 1,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சூரிய கூடார உலர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.
அதேபோன்று, சேலம் மாவட்டத்தில் கடந்த 3 ½ ஆண்டுகளில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கும் திட்டம், வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம், சூரிய கூடார உலர்த்தி அமைக்கும் திட்டம், வேளாண் விளை பொருட்கள் மதிப்புக்கூட்டும் இயந்திர மையங்கள், சூரிய ஒளி மின் வேலி அமைத்தல், மின் மோட்டார் பம்ப்செட்டுகள் வழங்கும் திட்டம், வேளாண் இயந்திரங்கள் இ-வாடகை மையம் அமைத்தல், இ-வாடகை நில மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு ரூ. 33.87 கோடி மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், இத்திட்டம் தொடர்பாக முழு விவரங்களைப் பெற்று பயனடைய வேளாண்மைப் பொறியியல் துறையின் சேலம் மாவட்ட வேளாண்மை பொறியியல் செயற் பொறியாளர் அலுவலகம் அல்லது வருவாய் கோட்ட அளவில் செயல்படும் வேளாண்மை பொறியியல் உதவி செயற்பொறியாளார் அலுவலகம் அல்லது வட்டார அளவில் வேளா ண்மை பொறியியல் உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர்களை தொடர்பு கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இச்செய்தியாளர் பயணத்தின்போது, வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நீலாம்பாள், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் குமரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், செய்தியாளர்கள் உடனிருந்தனர்.