சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் பேராசிரியர் இரா.வை.தனபாலன் தேசிய அளவிலான நீதிமன்ற வழக்கு வாதப் போட்டி – 2024 தொடக்க விழா கல்லூரி அரங்கத்தில் கடந்த 26ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. முதல் நிலை, கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதிச்சுற்று என நான்கு சுற்றுகளாக நடந்தது. இதில் பல்வேறு மாநில சட்டக்கல்லூரியை சார்ந்த 28 அணிகள் பங்கேற்றன.
நடுவர்களாக பல்வேறு சட்டக்கல்லூரி பேராசிரியர்கள், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினரான தமிழ்நாடு மாநில அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாஸ்கரன் ராஜரத்தினம் மற்றும் முனைவர் எஸ்.எம்.பாலகிருஷ்ணன் (பதிவாளர், தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைகழகம், திருச்சி) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவின் நிறைவு நாள் பரிசளிப்பு நிகழ்ச்சியில் கல்லூரியின் துணை முதல்வர் எம்.சாந்தகுமாரி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் தலைவர் த.சரவணன் தலைமை தாங்கி வெற்றியாளர்களை அறிவித்து விருதுகளும் கேடயங்களும் வழங்கினார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக முனைவர்.எஸ்.எம்.பாலகிருஷ்ணன் பேசுகையில், மாணவர்கள் நிறைய வழக்குவாதப் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்றும் அதற்கு தினமும் பயிற்சியுடன் கூடிய உள்ளார்ந்த ஆராய்ச்சியிலும் ஈடுபட வேண்டும் என்றும், சிலப்பதிகாரத்தின் சிறப்புகளை மேற்கோள் காட்டியும், மகாத்மா காந்தி அவர்கள் வழக்கறிஞராக அறியப்பட்ட வரலாற்றையும் மாணவர்களிடத்தில் எடுத்துரைத்தார். அடிப்படை சட்டத்தை அறிந்து அறிவை பெருக்கிக் கொள் ளவும் அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு மாநில அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆர்.பாஸ்கரன் ராஜரத்தினம் தனது சிறப்புரையில். இன்றைய வளர்ச்சியடைந்த சமுதாயத்தில் மாணவர்கள் தங்களது சட்ட அறிவை மேம்படுத்திக்கொள்ள பலதரப்பட்ட வாய்ப்புகள் உள்ளது எனவும், அதனை உங்களின் பெற்றோர்கள் மிகச்சிறப்பாக தங்களுக்கு அளித்துள்ளனர், எனவே அதனை சிறந்த முறையில் பயன்படுத்தி சிறந்த வழக்கறிஞராக மேம்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
மூன்று நாட்களாக நடைபெற்ற இந்த வழக்குவாதப் போட்டிகளில் ராமையா காலேஜ் ஆப் லா, பெங்களூரு அணியைச் சேர்ந்த தனுஷ், அப்பாஸ் அஹமத் மற்றும் ரோகன் ராய் ஆகியோர் முதல் பரிசை பெற்றனர்.
சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி, புதுபாக்கம் அணியை சேர்ந்த சிந்து வர்ஷினி, ஆகாஷ் சூர்யா மற்றும் மோகனகிருஷ்ணன் ஆகியோர் இரண்டாம் பரிசை பெற்றனர்.
சிறந்த வழக்கறிஞர் மாணவருக்கான விருதை யுனிவெர்சல் ஸ்கூல் ஆப்லா பெங்களுரு, சேர்ந்த மாணவர் பாண்டுரங் கிரீஸ், சிறந்த வழக்கறிஞர் மாணவருக்கான இரண்டாம் இடத்துக்கான விருதை ராமையா காலேஜ் ஆப் லா, பெங்களூரு அணியைச் சேர்ந்த அப்பாஸ் அஹமத், சிறந்த வழக்கறிஞர் மாணவிக்கான விருதை யுனிவெர்சல் ஸ்கூல் ஆப் லா பெங்களுரு சேர்ந்த மாணவி கீர்த்தனா மற்றும் சிறந்த வழக்கறிஞர் மாணவிக்கான இரண்டாம் இடத்துக்கான விருதை அரசு சட்டக்கல்லூரி திருச்சூர் சேர்ந்த மாணவி ஹிரித்யா ஹரிகுமார் பெற்றனர்.
சிறந்த எழுத்துபூர்வமான வாதுரைக்கான விருதை சிம்போசிஸ் லா ஸ்கூல் பூனே மாணவி பூமிகா, மற்றும் சிறந்த எழுத்துபூர்வமான வாதுரைக்கான இரண்டாம் இடத்துக்கான விருதை சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி, புதுபாக்கம் அணியை சேர்ந்த மாணவர் மோகனகிருஷ்ணன் என்பவரும் பெற்றனர்.
சிறந்த நன்னடத்தைக்கான விருதை கோவை அரசு சட்டக்கல்லூரி அணி பெற்றது. சிறந்த நன்னட த்தைக்கான இரண்டாம் விருதை யுனிவெர்சல் ஸ்கூல் ஆப் லா பெங்களுரு அணி பெற்றது. சிறந்த ஆராய்ச்சி யாளருக்கான விருதை அரசு சட்டக்கலூரி கேரளா அணி பெற்றது. சிறந்த ஆராய்ச்சியாளருக்கான இரண்டாம் விருதை யுனிவெர்சல் ஸ்கூல் ஆப் லா பெங்களுரு சேர்ந்த அணி பெற்றது.
இப்போட்டிகளில் பங்கேற்ற அணிகளுக்கு விருதுகளையும் சான்றிதழ்களையும் சிறப்பு விருந்தினர்கள் வழங்கினார்.
இவ்விழாவில் நிறைவு நாள் நிகழ்ச்சியில் கல்லூரியின் பேராசிரியை நீரஜா நன்றி கூறினார். இவ்விழாவில் முதன்மை நிர்வாக அலுவலர் எ.மாணிக்கம், கூடுதல் நிர்வாக அலுவலர் சுகந்தி, கல்லூரி டீன் முனைவர் டி.என்.கீதா மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் பேகம் பாத்திமா, சாந்தகுமாரி மற்றும் வழக்கு வாதப் போட்டிகளுக்கான குழு உறுப்பினர்கள் எம்.செவ்வந்தி, ஜோதிஸ் சாகோ, ஜோபி, கே.ரத்தினஜோதி, ஜே.மருதுபாண்டி, பி.பிரனேஷ் மற்றும் எம்.டயானின் ஆகியோர் உடனிருந்தனர்.