fbpx
Homeபிற செய்திகள்உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ‘சல்யூட்’!

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ‘சல்யூட்’!

ஒவ்வொரு வருடமும் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிடும் தகவல்களைப் பார்த்தாலே குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்வதைப் புரிந்துகொள்ள முடியும்.

அப்படியிருக்க ‘குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களைப் பார்த்தால் தவறில்லை’ என சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்தபோது அது சர்ச்சையானது மட்டும் அல்ல, கடும் எதிர்ப்புக்கும் ஆளானது. யாராலும் அந்த தீர்ப்பை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.

அதனால் தான், சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து இப்போது வெளியாகியுள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பு நாடு முழுவதும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களை செல்போனில் வைத்திருப்பதும், அதை தனிப்பட்ட முறையில் பார்ப்பதும் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாகும் எனவும் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது.

தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தகவல்படி, 2021-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 1,49,404 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2020-ஆம் ஆண்டைக் காட்டிலும் 16.2% அதிகம்.

இதில், போக்சோ வழக்குகள் 38%. அதுவே, 2022-ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான 1,62,449 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2021-ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது 8.7% அதிகம். இதில் போக்சோ சட்டத்தின் கீழ் 39.7% வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆனால், இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிராக அரங்கேறும் குற்றச்செயல்களில் 50%-க்கும் குறைவானவை தான் பதிவு செய்யப்படுகின்றன. வெளியே சொல்லாத சம்பவங்கள் இன்னும் எவ்வளவோ உள்ளன என்பது தான் கசப்பான உண்மை.

மேலும், ‘குழந்தைகள் ஆபாசப் படங்கள்’ என்ற வார்த்தை, உயர்நீதிமன்றங்கள் மற்றும் அரசியல் சட்டப் பிரிவுகளில், பயன்படுத்தப்படுகிறது. அதற்கு பதிலாக, ‘குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பானவை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும்,” என உச்சநீதிமன்றம் அமர்வு அறிவுறுத்தியுள்ளது.

இதற்காக போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை உச்சநீதிமன்றம் மீது நாட்டு மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்து வருகிறது. இதுபோன்ற தீர்ப்புகளை தருகிற போது இன்னும் ஆழமாக உச்சநீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை வலுவாகிறது என்பதில் சந்தேகமில்லை!

உச்சநீதிமன்றத்திற்கு சல்யூட்!

படிக்க வேண்டும்

spot_img