அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவு என்பது உச்சநீதிமன்றத்துக்கு முழுமையான அதிகாரத்தை வழங்கக் கூடியது. உச்சநீதிமன்றமானது வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு நிச்சயம் அநீதி இழைக்கப்பட்டுவிட்டது; நீதி கிடைத்தாக வேண்டும்; நீதி எந்த வகையிலுமே தடைபடக் கூடாது என முடிவு செய்தால் அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவை பயன்படுத்தலாம். பொதுவாக உச்சநீதிமன்றம் அரிதினும் அரிதாகவே இந்த பிரிவை பயன்படுத்தும்.
அண்மையில் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நளினி உள்பட 6 தமிழர்கள் விடுதலைக்கு இந்த 142-வது பிரிவு அதிகாரத்தை உச்சநீதிமன்றம் பயன்படுத்தி இருந்தது. தற்போது இதே 142-வது பிரிவை சண்டிகர் மேயர் தேர்தல் வழக்கிலும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் பயன்படுத்தி உள்ளது.
சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக & இந்தியா கூட்டணி (காங்கிரஸ், ஆம் ஆத்மி) இடையே போட்டி நிலவியது. இந்தியா கூட்டணியின் ஆம் ஆத்மி வேட்பாளர் பெற்ற 8 வாக்குகளை வேண்டும் என்றே செல்லாது என தேர்தல் நடத்திய அதிகாரி அறிவித்ததுடன் பாஜக வேட்பாளர்தான் வெற்றி பெற்றவர் என அறிவித்தார்.
இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது. சண்டிகர் மேயர் தேர்தலில் தேர்தல் நடத்திய அதிகாரி, வேண்டும் என்றே ஆம் ஆத்மி வேட்பாளர்களை செல்லாததாக்கும் வகையில் வாக்கு சீட்டில் ஏதோ கிறுக்குவது வீடியோக்களில் பதிவாகி வெளியாகி இருந்தது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்த முதல் நாளே, அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை என கொந்தளித்தது.
இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்திய அதிகாரியை கடந்த 2 நாட்களாக உச்சநீதிமன்றத்துக்கு வரவழைத்து கேள்விகளால் வெளுத்தெடுத்தனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.
மேலும் தேர்தல் அதிகாரியின் வாக்குச் சீட்டு தில்லு முல்லு வீடியோக்களையும் இதுவரை இல்லாத வகையில் நீதிமன்றத்துக்குள் தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் நீதிபதிகளும் பார்த்தனர்.
இறுதியாகவே நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காக அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவை -அதாவது உச்சநீதிமன்றத்துக்கு அரசியல் சாசனம் வழங்கிய அதிகாரத்தை பயன்படுத்தி சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் பெற்றதாகவே பிரகடனம் செய்தனர் நீதிபதிகள்.
நீதியை நிலைநாட்டுவதற்காக உச்சநீதிமன்றம் 142-வது பிரிவை கையில் எடுத்து நீதியை நிலைநிறுத்தியிருப்பது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தி இருக்கிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
அதேவேளையில் இன்னொன்றையும் மறந்து விடக்கூடாது. பாஜக தலையீடு இன்றி வாக்குச்சீட்டில் தேர்தல் அதிகாரி திருத்தம் செய்திருக்க வாய்ப்பில்லை. தனது வெற்றிக்காக எந்தவித குறுக்குவழியையும் முறைகேட்டையும் பாஜக கையிலெடுக்கும் என்பதற்கு இதுவே சாட்சியாகி விட்டது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சூழ்ச்சி செய்து வெற்றியை தட்டிப்பறிக்க சதி செய்யும் என்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் எழுப்பி வந்த குற்றச்சாட்டுகள் தற்போது உண்மையாகி விட்டதையே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அம்பலமாக்கி இருக்கிறது.
தற்போது ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் மூவர், பாஜகவிற்கு தாவிவிட்ட நிலையில் சண்டிகர் மேயர் பதவி ஆம்ஆத்மிக்கு ஒருவேளை இல்லாமல் போகலாம். ஆனால் பாஜக மீதான உலக மகா களங்கம் இந்திய ஜனநாயக வரலாற்றில் கருப்பு எழுத்துகளால் பொறிக்கப்பட்டு விட்டது, அதனை ஒருபோதும் அழிக்க முடியாது.
இந்தியாவின் ஜனநாயகத்தைக் காப்பாற்றிய உச்சநீதிமன்றத்தை நோக்கி நாட்டு மக்கள் அனைவரும் கைகூப்பி வணங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
நாமும் ஒரு சல்யூட் அடித்து பாராட்டுவோம்!