ஸ்கோடா ஆட்டோ இந்தியா குஷாக், ஸ்லாவியா கார்களில் புதிய கருப்பு நிற (டீப் பிளாக்) எலிகன்ஸ் கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரு கார்களும் குறைந்த எண்ணிக்கையிலேயே தயாரிக்கப்பட உள்ளன.
இந்த கார்கள் 1.5 டிஎஸ்ஐ என்ஜின் திறனுடன் கிடைக்கும். குஷாக், ஸ்லாவியா டீப் பிளாக் தயாரிப்பு குறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்ட் இயக்குநர் பீட்டர் சோல்க் கூறுகையில், ‘குஷாக், ஸ்லாவியாவில் கிளாசிக் கருப்பு நிறத்துக்கான தேவை அதிகம் உள்ளது.
எங்கள் தயாரிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகு முறையை அடிப்படையாகக் கொண்டவை. புதிய எலிகன்ஸ் எடிஷன்களின் அழகியல், நிறம், வடிவமைப்பு, அலங்கார அம்சங்கள் மிகுந்த மதிப்பையும், உரிமையின் பெருமையையும் தொடர்ந்து வழங்கும்’ என்றார்.
இரு கார்களிலும் அழகியலை மேம்படுத்த குரோம் லோயர் டோர் கார்னிஷ், பி-பில்லர்களின் மீது ‘எலிகன்ஸ்’ என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. ஸ்லாவியா காரில் குரோம் டிரங்க் கார்னிஷ் மற்றும் ஸ்கஃப் பிளேட்டில் ‘ஸ்லாவியா’ என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.
குஷாக் காரில் உள்ள 17-இன்ச் விஇஜிஏ டூயல் டோன் அலாய் வடிவமைப்பு, அதன் ஸ்டைலையும், கரடுமுரடான நிலப்பரப்பிலும் நேர்த்தியாக செல்லும் திறனையும் உறுதிப்படுத்தும்.
இந்த பண்டிகை காலத்தில் குஷாக், ஸ்லாவியா கார்களில், ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம், ஓட்டுநர், இணை ஓட்டுநருக்கு மின்சார இருக்கைகள், கால் வைக்கும் பகுதியில் ஒளிரும் விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு புதிய அம்சங்களை பொருத்தி உள்ளது.