ஸ்மார்ட்போனுக்கு அடிமையாவது வேடிக்கையான விஷயம் அல்ல. அதனை உணர்ந்த ஸ்பெயின், தனது நாட்டில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு ஸ்மார்ட் போனிலும் விழிப்புணர்வு எச்சரிக்கை வாசகத்தை இடம்பெற செய்ய முடிவு செய்துள்ளது. அரசுக் குழுவின் பரிந்துரைப்படி விரைவில் இந்த வாசகம் போன்களில் இடம்பெறும் என தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட்போனுக்கு அடிமையாவது மனநலன், உடல்நலன், தூக்கம், உறவு முறை என அனைத்தையும் வயது வித்தியாசமின்றி பாழ்படுத்துகிறது. இதை கருத்தில் எடுத்து கொண்டே ஐரோப்பிய நாடான ஸ்பெயின் இந்த துணிச்சலான முடிவை எடுத்துள்ளது. அதாவது சிகரெட்டை போலவே ஸ்மார்ட்போன்களிலும் ஹெல்த் விழிப்புணர்வு எச்சரிக்கை வாசகத்தை இடம்பெற செய்ய முடிவு செய்துள்ளது.
இது ஸ்மார்ட்போனுக்கு அடிமையாவதை தடுப்பதற்கும் பார்க்கும் நேரத்தைக் குறைப்பதற்கும் விழிப்புணர்வை அதனைப் பயன்படுத்துவோர் மத்தியில் ஏற்படுத்தும் என அந்த நாடு நம்புகிறது. அரசு நியமித்த வல்லுநர் குழு தாக்கல் செய்துள்ள 250 பக்க ஆய்வறிக்கையில் இது முன்மொழியப்பட்டுள்ளது.
இதில் டிஜிட்டல் சாதனங்களை குழந்தைகள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவது சார்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது நினைவிருக்கலாம்.
உலக அளவில் சிகரெட் பிடிப்பதால் கோடிக் கணக்கிலான மக்கள் உடல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். அதனை தடுக்கும் பொருட்டு பல்வேறு நாடுகளின் அரசுகள் சிகரெட் உட்பட புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் அந்தப் பொருட்களில் படங்கள் மற்றும் வாசகங்களை அச்சிட்டு விற்பனை செய்து வருகின்றன.
சிகரெட் பாக்கெட்களில், புகைபிடித்தால் கேன்சர் (புற்றுநோய்) வரும் என்று எச்சரிக்கும் படங்கள், வாசகங்கள் நம் நாட்டில் அச்சிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தாக்கம் எந்தளவுக்கு பயன்தருகிறதோ தெரியவில்லை.
பலர் அதனை உதாசீனப்படுத்தினாலும் சிலராவது தங்களை அந்தப்பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க வழிவகுக்கும் அல்லவா? பலன் கொஞ்சம் தான் என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நிறுத்த முடியுமா என்ன?
ஸ்மார்ட்போனில் எச்சரிக்கை வாசகத்தை பொறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஸ்பெயின் நாட்டின் முடிவு பாராட்டுக்குரியது. இது குறித்து பரிசீலித்து இந்தியாவிலும் செயல்படுத்தினால் நல்லது தான். அதற்கான முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்!