நாம் நவீன காலத்தில் வாழ்கிறோம். சமூக வலைத்தளங்கள் நம்மை ஆக்கிரமித்துவிட்டன. உலகில் 10 நல்ல நண்பர்கள் உடன் இருப்பதைக் காட்டிலும், சமூக வலைத்தளங்களில் எவ்வளவு பாலோவர்ஸ்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இளைய தலைமுறையினர் முக்கியத்துவம் தருகிறார்கள்.
பள்ளி மாணவ, மாணவிகள் கூட பல மணி நேரம் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்களின் படிப்பு மட்டுமின்றி, பழக்கங்களும் கூட பாதிக்கப்படுகிறது.
இது தொடர்பாகச் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் சமூக வலைத்தளங்களை அதிக நேரம் பயன்படுத்துவது மன ரீதியான மோசமான பாதிப்பை ஏற்படுத்துவது தெரிய வந்தது. மேலும், மனச்சோர்வு மற்றும் பதற்றத்தை ஏற்படுத்துவதாகவும் ஆய்வில் கூறப்பட்டது.
குறிப்பாக 11- 15 வயதில் உள்ளவர்கள் அதிகளவில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும்போது அவர்கள் சுய அடையாளத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன யோசிப்பார்கள் என்பதற்கே அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். மேலும், இந்த காலகட்டத்தில் குழந்தைகளின் மனது விமர்சனத்தை ஏற்கும் அளவுக்குப் பக்குவப்பட்டு இருக்காது என்பதால் மன பாதிப்பு மற்றும் அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
எனினும் இந்த சட்டத்திற்கு சிறுவர் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சிறுவர்களின் அறிவை வளர்க்கும் சமூக ஊடக பயன்பாட்டை முழுமையாகத் தடை செய்வதை விட அவற்றை பாதுகாப்பாக பயன்படுத்த அவர்களுக்கு சொல்லித் தருவது தான் சரியான தீர்வாக அமையும் என்ற வாதம் செய்கின்றனர்.
ஆனால் மற்றொரு தரப்பினரோ இணையத்தைப் பாதுகாப்பாக பயன்படுத்தும் பக்குவம் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு வராது என்று பதில் வாதத்தை முன்வைக்கிறார்கள். இந்த வாதத்தில் உள்ள உண்மையை யாரும் மறுக்க முடியாது.
தற்போதைய சூழலில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என கிட்டதட்ட எல்லா நாடுகளிலும் சமூக வலைத்தளங்களை 13 வயதாகி இருந்தாலே பயன்படுத்த முடியும். இதுவே சிக்கலுக்கு அடிப்படை காரணம் என்பதால் குறைந்தபட்ச வயதை 16ஆக உயர்த்துமாறு ஆஸ்திரேலியாவில் கோரிக்கை எழுந்தது. அரசு நடத்திய கருத்து கேட்பில் அந்நாட்டு மக்களும் நல்லாதரவை நல்கினர்.
இதனிடையே அடுத்த வாரம் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இது தொடர்பான சட்டம் முன்வைக்கப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து குழந்தைகளைத் தடுப்பதே இதன் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
உலகளவில் இதுபோல சட்டம் கொண்டு வரப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்த சட்டம் குறித்து வேறு தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் இருப்போருக்கு இந்த தடை பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் இருப்போருக்கும் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வர வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறார்களின் நலனுக்கான உயரிய திட்டத்தை செயல்படுத்திட தைரியமாக முனைந்திருப்பது பாராட்டுக்குரியது. பூனைக்கு மணி கட்டி விட்டது ஆஸ்திரேலியா. அதன் ஓசை உலகம் முழுவதும் ஒலித்து சிறார்களுக்கு நல்வழி காட்டட்டும்.
இந்திய அரசும் இத்திட்டத்தை மக்களின் கருத்தறிந்து செயல்படுத்திட பரிசீலனை செய்ய வேண்டியது மிகமிக அவசியம்!