கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம், மூன்றாம்பட்டி ஊராட்சி, கேத்துநாயக்கன்பட்டி இலங்கை வாழ் தமிழர் முகாமில், ரூ.8 கோடியே 52 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் 148 இலங்கை தமிழர் குடியிருப்பு கட்டுமான பணிகள் மற்றும் ஊரக வாழ்வாதார திட்ட இயக்கம் சார்பாக தொழில் முனைவோர் கடனுதவி பெற்று தையல் தொழில் மேற்கொண்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுவினரின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் செய்தியாளர்களுடன் பயணம் மேற்கொண்டு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
செய்தியாளர்கள் பயணத்தின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
அதனடிப்படையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர்களுக்கு 37 தொகுப்பு வீடுகள் ரூ.1 கோடியே 85 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் 37 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு முதலமைச்சர் அவர்களால் 17.09.2023 அன்று திறந்து வைக்கப்பட்டு, பயனாளிகளின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. இம்முகாமில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, பேவர்பிளாக் சாலை, கழிவுநீர் கால்வாய் முதலானஅடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக மூன்றம்பட்டி ஊராட்சி கேத்துநாய்க்கன்பட்டி குடியிருப்பில் முகாம் வாழ் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு வீடுகள் கட்டும் பணிக்கு புல எண்.4ஃ1 மற்றும் 5-ல் உள்ள 1.61.88 ஹெக்டர் நிலம் தேர்வு செய்யப்பட்டு 13 அலகுகளைக் கொண்ட 52 வீடுகள் தொகை ரூ.2 கோடியே 99 இலட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் கட்ட நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் முன்னேற்றத்தில் உள்ளது.
இத்திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகள் ஒவ்வொன்றும் 300 சதுர அடிகளைக் கொண்டதாகும். இந்த வீடுகள் சமையலறை, படுக்கை அறை, கூடம் மற்றும் 20.21சதுரஅடி கொண்ட கழிப்பறை ஆகியவைகளைக் கொண்டதாகும். 52 வீடுகளில் 32 வீடுகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 வீடுகளுக்கும் வண்ணப்பூச்சு பூசும் பணி நடைபெற்றுவருகிறது.
மேலும், கூடுதலாக அதே இடத்தில் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு 96 வீடுகள் ரூ.5 கோடியே 53 இலட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் கட்ட நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் என மொத்தம் 148 வீடுகள் ரூ. 8 கோடியே 52 இலட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இக் குடியிருப்புக்கு அடிப்படை வசதிகள் செய்யும் வகையில் ரூ.18 இலட்சம் மதிப்பீட்டில் 30000 லிட்டர் கொள்ளளவு கொண்டமேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கனிம நிதியிலிருந்து கட்டுமான பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளது. ரூ. 6 இலட்சத்து 91 ஆயிரம் மதிப்பில் 148 வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ரூ.10.00 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட ஊராட்சியின் மாநில நிதிக்குழு மான்ய நிதியிலிருந்து பல்வகை கட்டடம் கட்டுமான பணிகள் 80 சதவிகிதம் முடிவுற்றுள்ளது.
மேலும், ரூ.2 கோடியே 22 இலட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அனைத்து பணிகளும் 3 மாத காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு அறுவுறுத்தப்பட்டுள்ளது. பணிகள் முடிவடைந்ததும் வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து பிரதமந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அனுமன் தீர்த்தம் முதல் சிங்காரப்பேட்டை வரை (வழி கருக்கம்பட்டி, பாவக்கல், கேத்து நாயக்கன்பட்டி) சுமார். 4.5 கி.மீ தூரத்திற்கு ரு. 2 கோடியே 89 இலட்சம் மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் சாலை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முதற்கட்டமாக பாம்பாறு அணைப்பகுதியில் வீடுபெற்ற பயனாளி முத்துமாணிக்கம் தெரிவித்ததாவது:
நான் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் பாம்பாறு அணையில் முதன் முதலாக தற்காலிக குடியிருப்பில் வசித்து வந்தேன். அந்த வீட்டில் மழைகாலங்களில் குழந்தைகளுடன் வசிப்பது மிகவும் சிரமமாக இருந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு புதிய கான்கிரிட் வீடு கட்டிகொடுக்கப்படும் என அறிவித்தார்கள். இந்த அறிவிப்பு எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருந்தது. முதல் கட்டமாக எங்கள் பகுதியை சேர்ந்த 37 குடும்பத்தினருக்கு புதிய கான்கிரிட் வீடு கட்டிகொடுத்து தற்போது புதிய வீட்டில் வசித்து வருகிறோம். தற்காலிக வீட்டில் குடியிருந்த எங்களுக்கு சொந்த வீடு என்ற கனவை நனவாக்கி கொடுத்த தாயுள்ளம் படைத்த தமிழ்நாடு முதலமைச்சர் அய்யா அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.
முதற்கட்டமாக பாம்பாறு அணைப்பகுதியில் வீடுபெற்ற பயனாளி கிரேசி நான்சி ஜெனிமா அவர்கள் தெரிவித்ததாவது:
நான் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் பாம்பாறு அணையில் முதன் முதலாக தற்காலிக குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். எனது பெற்றோர்கள் சுமார் 35 வருடங்களாக பாம்பாறு அணை பகுதியில் உள்ள தற்காலிக குடியிருப்பில் வசித்து வந்தனர். நானும் இங்குதான் பிறந்தேன். இந்நிலையில் நான் நர்சிங் பயின்று தனியார் மருத்துவ மனையில் பணியாற்றி வருகிறேன். எனக்கு திருமணமாகி இரண்டு பெண்குழந்தைகள் உள்ளனர். தற்காலிக வீட்லேயே வசித்து வந்த எங்களுக்கு பாம்பாறு அணை பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள வீட்டில் எங்கள் குடும்பத்திற்கு வீடு ஓதுக்கீடு செய்யப்பட்டது. இந்த புதிய வீட்டில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறோம். இந்த சொந்த வீடு எங்களுக்கு மழை மற்றும் வெயில்காலங்களில் மிகவும் பாதுகாப்பானதாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. மேலும் குடிநீர், தெருவிளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகள் சிறப்பாக உள்ளது.
எங்கள் மக்களும் அனைத்து அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும் என்று இதுபோன்ற சிறப்பான திட்டத்தை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அய்யா அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஊத்தங்கரையில், ஊரகவாழ்வாதார திட்ட இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பாக தொழில் முனைவோர் கடனுதவி பெற்று தையல் தொழில் மேற்கொண்டு வரும் ஜெய்சாய்ராம் மகளிர் குழுவினரின் செயல்பாடுகளை பார்வையிட்டு ஊரக வாழ்வாதார திட்டம் மூலம் பெற்ற கடனுதவிகள், துணிகள் மற்றும் எம்ராய்டிங் பணிகள் குறித்து அதன் மூலம் கிடைக்கும் வருமானம், சேமிப்பு குறித்து கேட்டறிந்தார்.
இவ்வாய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் பெரியசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் மலர்விழி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.மோகன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கே.ரமேஷ், உதவி செயற்பொறியாளர் ராஜபாரதி, வட்டாட்சியர் திருமால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலாஜி, தவமணி, உதவி பொறியாளர்கள் செல்வம், சாஸ்தா, உதவி திட்ட அலுவலர்கள் வேல்முருகன், மோகன் குமார், ஜெயக்கொடி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.