fbpx
Homeபிற செய்திகள்தமிழர்களுக்கு கைகொடுப்பாரா இலங்கை புதிய அதிபர் அநுர?

தமிழர்களுக்கு கைகொடுப்பாரா இலங்கை புதிய அதிபர் அநுர?

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
இலங்கை என்றாலே ஈழத் தமிழர்களின் நினைவுகள் தான் தமிழ்நாட்டு மக்களுக்கு முதலில் வரும். விடுதலை புலிகளின் போராட்டமும், சிங்கள அரசின் பதிலடியும், கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்களும், இன்னும் மீண்டு வராத பூர்வகுடி மக்களும் எனப் பல்வேறு விஷயங்கள் வரலாறாக பதிவானதை மறக்கவே முடியாது.

இந்நிலையில் தற்போது இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்றுள்ளது. அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆட்சி மாற்றத்தை அந்நாட்டு மக்கள் விரும்பியிருப்பது தெரியவருகிறது. மார்க்சிஸ்ட் பின்புலம் கொண்ட தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அமோக வெற்றி பெற்று புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டு இன்று பதவியேற்றுள்ளார்.

இவர் இந்தியா – இலங்கை உறவில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுவது இயல்பு தான். குறிப்பாக இலங்கை தமிழர்களின் நிலையை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பாரா? தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண முயல்வாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இலங்கை தமிழர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான 1987ஆம் ஆண்டின் 13வது சட்டத் திருத்தம் என்பது முக்கியமானது. இதை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நடந்து முடிந்த தேர்தலின்போது வலுவாக தமிழர் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டது.

நிலம், காவல் மற்றும் நிதி தொடர்பாகக் கூடுதல் அதிகாரத்தை இந்த சட்டத் திருத்தம் மாகாண சபைகளுக்கு அளிக்கிறது. ஆனால், இதுவரை மாகாண சபைகளுக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை.

கடந்த ஜூன் மாதத்தில் யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்து தமிழ் அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார் அநுரகுமார திஸாநாயக்க. அந்த சந்திப்பிற்குப் பிறகு பேசிய அவர், மாகாண சபைகள் தொடர்ந்து செயல்படும் எனக் கூறினார். மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவது பற்றி அவர் ஏதும் தெரிவிக்கவில்லை.

தற்போதைய புதிய சூழலில் 13வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்தி இலங்கை தமிழர்களின் வாழ்வில் புதிய அதிபர் ஒளியேற்றுவாரா? தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி உரிமையை உறுதி செய்து பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பாரா?
புதிய அதிபர் அநுரகுமார திஸாநாயக்க என்ன செய்வாரோ? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நம்பிக்கையோடு அவருக்கு வாழ்த்து சொல்வோம்!

படிக்க வேண்டும்

spot_img