தமிழகத்தில், கடந்த 2006-ம் ஆண்டு கட்டாய தமிழ் கற்றல் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் முதல் பாடமாக தமிழ் கட்டாயமாக்கப்பட்டது.
இச்சட்டத்திற்கு எதிராக, அந்த சட்டம் கொண்டு வரப்பட்ட போதே சிறுபான்மை பள்ளிகள் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தன. ஆனால், அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்,‘அரசியல் சட்டத்தின் 29 மற்றும் 30 வது பிரிவுகளின்படி சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள எந்த உரிமையையும் தமிழ் கட்டாயப் பாட சட்டம் பறிக்கவில்லை.
உள்ளூர் மொழியை கற்றுக்கொள்வது குழந்தைகளின் நலனுக்கு மிகவும் நல்லது. மாறாக உள்ளூர் மொழியை கற்பிக்க மறுப்பது நாட்டின் ஒற்றுமைக்கு நல்லதல்ல’ எனத் தீர்ப்பளித்தது.
இதன் காரணமாக, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் உருது உள்ளிட்ட பிறமொழி பள்ளி மாணவர்களும் பொதுத்தேர்வில் தமிழ் தேர்வை கட்டாயம் எழுத வேண்டிய நிலை உருவானது.
இந்த சட்டத்திற்கு எதிராக மொழிச்சிறுபான்மை பள்ளிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 2015-16ம் ஆண்டில் தமிழ் கட்டாயப்பாட சட்டத்தை செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்தது.
இந்தத் தடை உயர்நீதிமன்றத்தால் 2021-22 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், பிறமொழி மாணவர்கள் தமிழ்த் தேர்வை எழுதுவதற்கு விலக்கு அளிக்கக் கோரி, தமிழ்நாடு மொழிவாரி சிறுபான்மையினர் சங்கத்தின் சார்பில் இந்த நிதியாண்டிலும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வின் முன்பு நேற்று நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், “பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்த் தேர்வு எழுத மொழிவாரி சிறுபான்மையின மாணவர்களுக்கு மேலும் ஓராண்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும்“ என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தகுதியின் அடிப்படையிலானது அல்ல; பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாக இந்த வழக்கை விசாரித்து முடிக்க இயலாது என்ற அடிப்படையில் தான் இந்த இடைக்காலத் தீர்ப்பை வழங்கியுள்ளதாக தெரிகிறது.
தமிழ் கட்டாயப் பாடத்தை எதிர்த்து சிறுபான்மை பள்ளிகள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை முன்கூட்டியே விசாரணைக்கு எடுத்திருந்தால், நடப்பாண்டிலிருந்து பத்தாம் வகுப்பு வரை தமிழ்க் கட்டாயப்பாடமாக்கப்பட்டிருக்கும்.
எனவே, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கு உரிய அழுத்தம் கொடுத்து சிறப்பாக நடத்தி, அடுத்த ஆண்டிலிருந்தாவது பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். மீண்டும் நீதிமன்றம் மூலம் விலக்கை நீட்டிக்கும் நிலை ஏற்படவே கூடாது.
மொழிச் சிறுபான்மையினராகவே இருந்தாலும் அவர்கள் தமிழ்நாட்டில் தமிழ் மொழியை படித்து தான் ஆக வேண்டும். அதிலும் தமிழக அரசின் சலுகைகளை தாராளமாகப் பெற்றுக் கொண்டு, தமிழ் படிக்க மறுப்புக் கூறுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது!