fbpx
Homeபிற செய்திகள்முதல்வரின் முழக்கத்தை எதிரொலிக்கும் தமிழ்நாடு!

முதல்வரின் முழக்கத்தை எதிரொலிக்கும் தமிழ்நாடு!

மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ் மாநில அரசுகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 2023-24 கல்வியாண்டின் 4-ம் தவணை நிதி ரூ.249 கோடியும், 2024-25 கல்வியாண்டின் நிதி ரூ.2,152 கோடியும் ஆக மொத்தம் ரூ.2401 கோடி மத்திய அரசால் இன்னும் விடுவிக்கப்படாததால் தமிழக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மும்மொழி கொள்கை, தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்டவையை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தினால்தான் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தர முடியும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்து இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகும். அவரது நிபந்தனை கூட்டாட்சி நெறிகளை சீர்குலைக்கும் தன்மை கொண்டது.

கடந்த ஜனவரி மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை, தமிழ்நாட்டின் இல்லம் தேடி கல்வித் திட்டம் நல்ல பலன்களை தந்திருப்பதை சுட்டிக்காட்டி, பாராட்டியிருக்கிறது. பாராட்டுப் பெற்ற மாநிலத்திற்கு ஊக்கம் தருவதற்கு பதிலாக, விடுவிக்க வேண்டிய நிதியை நிறுத்தி வைத்துப் பழிவாங்குவது, மிரட்டுவது போன்ற செயலில், மத்திய அரசு தொடர்ந்து ஈடுபடுவதை தமிழ்நாடு மௌனசாட்சியாக கடந்து சென்று விடும் என்று யாராவது நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது.

நேற்றைய தினம் கடலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் போக்கைக் கடுமையாக கண்டித்து போர் முரசை கொட்டியிருக்கிறார். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான், கல்வித் துறைக்கு தர வேண்டிய நிதியைத் தருவோம் என்று ‘ப்ளாக்மெயில்’ செய்வதற்கு பெயர் என்ன? அரசியல் இல்லையா? என்றும் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்காததால் தமிழ்நாடு 5,000 கோடி ரூபாய் இழக்கிறது என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் அவர்களே, தமிழ்நாட்டிலிருந்து நீங்கள் வாங்கிக்கொண்டு இருக்கும் வரியை தரமாட்டோம் என்று சொல்ல எங்களுக்கு ஒரு நொடி போதும், மறந்துவிடாதீர்கள் என்றும் முழங்கி இருக்கிறார்.

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள். தமிழர்களின் தனித்துவமான குணத்தை மறுபடியும் பார்க்கவேண்டும் என்று ஆசை படாதீர்கள்! தமிழுக்கும் - தமிழ்நாட்டுக்கும் - தமிழினத்துக்கும் எதிரான எந்தச் செயல்பாடுகளும் நான் இருக்கும்வரைக்கும், திமுக இருக்கும் வரைக்கும் நிச்சயம், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும்வரைக்கும் இந்த மண்ணுக்குள் வர முடியாது என்று மும்மொழி கொள்கைக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் உறுதியை அறுதியிட்டு எச்சரித்து இருக்கிறார்.

அந்த முழக்கம் தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் நெஞ்சங்களில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

கடந்த 1965 ஆம் ஆண்டில் மத்திய அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கையை எதிர்த்து தமிழ்நாடு ஒருமுகமாக கொந்தளித்ததை மத்திய அரசு நினைவிற்கொண்டு தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க முன்வந்தால் மட்டுமே பிரச்னைக்கு முடிவு கிடைக்கும்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடலூர் பேச்சு, மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிரான போர் முழக்கம் என்றால் மிகையன்று. தமிழ்நாட்டின் முடிவு இறுதி செய்யப்பட்ட ஒன்று. இனி முடிவு செய்ய வேண்டியது மத்திய அரசின் கையில் உள்ளது.

இப்பிரச்னையை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எப்படி கையாளப் போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்!

படிக்க வேண்டும்

spot_img