fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாடு ஆளுநர் ரவியின் ஆட்டத்துக்கு சம்மட்டி அடி!

தமிழ்நாடு ஆளுநர் ரவியின் ஆட்டத்துக்கு சம்மட்டி அடி!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி காலம் தாழ்த்துவதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வந்தது. இது தொடர்பாக ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி குறுக்கீடு தொடர்பாக புதிய கூடுதல் மனுவையும், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்தது.


ஆளுநருடனான மோதல் உச்சகட்டம் வரை சென்றாலும் அந்த பதவிக்கு உரிய மரியாதையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அளிக்கத் தவறியதில்லை. இந்த விஷயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினும் கண்ணியமாக நடந்து கொண்டார். வேறு வழியே இல்லை என்ற நிலைக்குப் பின்னரே சட்டப்போராட்டதை அவர் கையிலெடுத்தார்.

வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. ஜனவரி 2020 முதல் நிலுவையில் உள்ள 10 மசோதாக்களுக்கு ஒப்புதலை நிறுத்தி வைத்து, மாநில சட்டமன்றத்தால் மீண்டும் இயற்றப்பட்ட பிறகு அவற்றை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை “சட்டவிரோதமானது மற்றும் தவறானது” என்றும், அவை ரத்து செய்யப்பட வேண்டியவை என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதுமட்டுமல்ல, இந்த பத்து மசோதாக்கள் மீது ஜனாதிபதி எடுத்த எந்தவொரு விளைவு நடவடிக்கைகளும் சட்டத்திற்குப் புறம்பானவை என்றும் அறிவிக்கப்பட்டன.

அதோடு, மாநில சட்டமன்றத்தால் மீண்டும் நிறைவேற்றப்பட்ட பிறகு, இரண்டாவது சுற்றில் சமர்ப்பிக்கப்பட்டபோது, பத்து மசோதாக்களும் ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றதாகக் கருதப்படும் என்று அறிவித்த உச்சநீதிமன்றம், ஆளுநர் நேர்மையாக செயல்படவில்லை என்றும் இடித்துரைத்துள்ளது. ஆளுநருக்கு ‘வீட்டோ’ அதிகாரம் & சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாவை செயல்படவிடாமல் தடுக்கும் உரிமை கிடையாது என்று திட்டவட்டமாக தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டு விட்டது.

ஆளுநர் நிலுவையில் வைத்திருந்த பத்து மசோதாக்களும் செல்லும் என்பது, பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டு விட்ட வரலாற்றுத் தீர்ப்பாகும்.
மேலும், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி இடையூறாக இருந்தார்.

தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் அவை சரி செய்யப்பட்டுள்ளது. இனி மாணவர்களின் உயர்கல்வியில் எந்த தடைகளும் இருக்காது. பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் விரைவில் நியமிக்கப்பட்டு பிரச்சனைகள் சரியாகி விடும். முதலமைச்சரே வேந்தராக உருவெடுப்பார்.

தனக்கு இல்லாத அதிகாரத்தை, இருப்பதாகக் கருதி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசின் சட்ட வலிமைக்கு, ஆட்சிக்கு எதிராக இதுவரை நடந்துகொண்டுள்ள ஆளுநரை, குடியரசுத் தலைவர் ‘டிஸ்மிஸ்’ (திரும்பப் பெறவேண்டும்) செய்யவேண்டும் அல்லது அவரே ‘ராஜினாமா’ செய்து, வெளியேறவேண்டும் என்பதுதானே பொருள்? ஆளுநர் பதவியில் ஆர்.என்.ரவி நீடித்தால் அரசமைப்புச் சட்ட விதிகளுக்கு முற்றிலும் எதிரான முன்னுதாரணமாகிவிடக் கூடும். இதனை ஒன்றிய அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

சம்மட்டி அடியாக உச்சநீதிமன்றம் ஓங்கி அடித்து விட்டது. ஆளுநர் பதவியில் நீடிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என்.ரவி இழந்துவிட்டார். உடனடியாக அவர் ராஜ்பவனை விட்டு தன்மானத்தோடு வெளியேறுவது தான் நாட்டுக்கும் நல்லது. ஜனநாயக மரபுகளை காப்பதற்கும் அதுவே வழிகோலும்.

தீர்ப்பினை வழங்கிய உச்சநீதிமன்றத்தையும், மாண்பமை நீதிபதிகள் ஜஸ்டிஸ் பர்திவாலா, ஜஸ்டிஸ் மகாதேவன் ஆகியோரையும் பாராட்டாமல் இருக்க முடியாது.
இந்தத் தீர்ப்புமூலம் இந்தியா முழுமைக்கும் உள்ள மாநில சட்டப்பேரவைகளின் அதிகாரத்தைக் காப்பாற்றி, தடம்புரண்ட ஜனநாயகத்தை மீண்டும் பிழைக்க வைத்த தனிப்பெரும் சாதனையைச் செய்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எத்தனை பாராட்டினாலும் தகும்!

படிக்க வேண்டும்

spot_img