கல்வி நிறுவனங்களில் தென்னிந்திய தேயிலையின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை இந்திய தேயிலை வாரியம் முன்னெடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியில் கிரீன் பீல்ட் கேம்பஸில் உள்ள வி.சி.எஸ்.எம். மெட்ரிகுலேசன் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் மஹிபால் சிங் (ஆராய்ச்சி இயக்குநர், தேயிலை வாரியம் இந்தியா, குன்னூர்), தீபக் ஷா (நிர்வாக இயக்குனர், கிரைஸ்டல் டீ இந்தியா நிறுவனம்), கிரீஸ் நாயர் (சேர்மன், தேயிலை வர்த்தக சங்கம், கோவை) ஆகியோர் பங்கேற்று தேயிலை பயன்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
தேயிலை தயாரிப்புகளின் முக்கியத்துவத்தையும் நன்மைகளையும், தேயிலை தோட்டத்தின் செயல்முறையையும் மாணவர்களுக்கு அவர்கள் விளக்கினர். மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
முன்னதாக சிறப்பு விருந்தினர்களை பள்ளித் தாளாளர் ஹெரால்ட் சாம் சால்வை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியின் போது, சிறப்பு விருந்தினர் கேட்ட கேள்விகளுக்கு சரியாகப் பதில் அளித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வு மாணவர்களிடையே தென்னிந்திய தேயிலையின் தரம் மற்றும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.