fbpx
Homeதலையங்கம்தமிழ்நாட்டின் வெற்றிக்குபாதை அமைத்த பட்ஜெட்!

தமிழ்நாட்டின் வெற்றிக்குபாதை அமைத்த பட்ஜெட்!

சட்டப்பேரவையில் 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். 9 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை மீண்டும் செயல்படுத்தப்படும். 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும், ஊரகப் பகுதிகளில் ரூ.3500 கோடியில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும், 10 இடங்களில் புதிய அரசு கலை – அறிவியல் கல்லூரிகள் துவக்கப்படும், ஒரு லட்சம் மாணவர்களுக்கு ரூ.2,500 கோடி கல்விக்கடன் வழங்கப்படும், 9 மாவட்டங்களில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும், ரூ.1031 கோடியில் 3 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் மற்றும் தொழில்துறையினருக்கு சலுகைகள் என அனைத்து தரப்பினரும் பாராட்டும் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக, பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் விதமாக சில இனிப்பான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
“விடியல் பயணம்“ திட்டத்தால் பேருந்தில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை முன்பு இருந்ததை விட 65 சதவீதமாக உயர்ந்துள்ளது. தினமும் இலவச பேருந்தின் மூலம் 50 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பயணம் செய்கின்றனர். இந்த ஒரு திட்டத்தின் மூலம் பெண்கள் மாதா மாதம் பேருந்து கட்டணத்திற்காக செலவு செய்யக்கூடிய தொகையை அதாவது ஒரு பெண் மாதாமாதம் ரூ.888 வரை சேமிப்பதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை திட்டம். இத்திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மகளிருக்கு மாதம் மாதம் 1,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் விண்ணப்பதாரர்களை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தற்போது இந்த திட்டத்திற்காக 13,877 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.10 லட்சம் வரை மதிப்பிலான வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துகள், பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால், அத்தகைய ஆவணங்களுக்கு பதிவு கட்டணம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஒரு சதவீதம் குறைக்கப்படும்.
வரும் 5 ஆண்டுகளில் 1 லட்சம் மகளிரை தொழில் முனைவோர் ஆக்கும் பெருந்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில், பெண்கள் 20 சதவீத மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடன் பெற்று, தொழில் தொடங்க திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும். இத்திட்டத்துக்கான மானிய உதவிக்காக இந்த ஆண்டில் ரூ.225 கோடி ஒதுக்கப்படும்.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. இதற்காக நடப்பாண்டுக்கு ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
“தோழி விடுதிகள்” ஏற்கனவே திருச்சி, தாம்பரம் என தமிழ்நாட்டின் முக்கியமான 13 இடங்களில் இயங்குகிறது. தற்போது இந்த திட்டத்தினை மேலும் விரிவு படுத்த அரசு முயற்சி செய்து வருகிறது.
இன்று பல பெண்களுக்கு தங்கள் வாழ்வை மேம்படுத்தும் விதமாக இயங்கிக் கொண்டிருக்கும் சுய உதவி குழு திட்டத்தையும் விரிவு படுத்த அரசு முயற்சித்து வருகிறது. அதற்காக இந்த பட்ஜெட்டில் சுய உதவிக் குழுக்களுக்கு 37,000 கோடி ரூபாய் அளவிற்கு வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஏற்கனவே 4 லட்சத்திற்கும் அதிகமான குழுக்கள் இயங்கி வரும் நிலையில் 1000 புதிய சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும். இப்படியாக பெண்களுக்கான நலத்திட்டங்களின் குவியலாக தமிழக பட்ஜெட் அமைந்துள்ளது.

வழக்கம் போல எதிர்க்கட்சி தலைவர்கள் பூதக்கண்ணாடி அணிந்து குறைகளைத் தேடித் தேடி விமர்சித்தாலும் மொத்தத்தில் அதிக வரவேற்பைப் பெற்ற பட்ஜெட்டாக தமிழ்நாட்டின் மீது ஒளி பாய்ச்சி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. சமூக நீதி & பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு தமிழ்நாடு வெற்றி நடைபோட இந்த பட்ஜெட் பாதை அமைத்துத் தந்துள்ளது என்றால் மிகையாகாது.
அதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவையும் தமிழ்நாடே போற்றி பாராட்டுகிறது வாழ்த்துகள்!

படிக்க வேண்டும்

spot_img