தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டிருந்தார். மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அரசியலமைப்பிற்கு விரோ தமான, சட்டவிரோதமான மற்றும் தவறான முறையில் செயல்பட்டதற்காக உச்ச நீதிமன்றம் அவருக்கு எதிராக ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 12) மதுரையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தலைமை விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது உரையின் இறுதியில், மாணவர்களை ‘ஜெய் ஸ்ரீ ராம்‘ என்று கோஷமிடச் சொன்னார். வேறு வழியின்றி மாணவர்களும் கோஷமிட்டனர். நாட்டின் மிக உயர்ந்த பதவிகளில் ஒன்று ஆளுநர் பதவி. ஆனால் ஆர்.என்.ரவி ஒரு மதத் தலைவர் போல நடந்து கொண்டிருக்கிறார்.
இந்தியா, பல்வேறு மதத்தினரும் ஒருமித்து வாழும் ஒரு மதசார்பற்ற நாடு என்பதை கொஞ்சம் கூட நினைவில் கொள்ளாமல் அவர் இந்த மதவாத கோஷத்தை அதுவும் ஒரு கல்வி நிறுவன விழாவில் வெளிப்படுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் சாதி, மதங்களுக்கு இடம்தராமல் நிலவும் ஆரோக்கியமான கல்விச் சூழலை சீர்குலைக்கும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி இருக்கிறார். இதனை யாரும் மறுக்க முடியாது; கண்டிக்கத்தான் முடியும். ஆர்.எஸ்.எஸ், பாஜக தலைவர்களால் கூட பகிங்கரமாக மறுக்க முடியாது.
உச்சநீதிமன்றம் சம்மட்டியால் அடித்தாற்போல ஒரு தீர்ப்பை வழங்கிய போது கூட அது பற்றி அவர் கொஞ்சம் கூட வேதனைப்பட்டதாகத் தெரியவில்லை. அப்படியிருந்தால் இனி அப்படியெல்லாம் நடக்காது
என வருத்தம் தெரிவித்து இருப்பார்.
குறைந்தபட்சம் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கிறேன் என்றாவது சொல்லியிருப்பார்?
இந்த நிலையில் மீண்டும் சர்ச்சைக் கருத்தை வெளியிட்டு இருப்பது தமிழ்நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்கும் அவரது தொடர் முயற்சிகளில் ஒன்றே ஆகும். ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளை தமிழ்நாட்டுத் தலைவர்களும் மக்கள் அமைப்பினரும் தொடர்ந்து கண்டித்து வருகின்றனர்.
அவர் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற வேண்டும். அல்லது மத்திய அரசே திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் முத்தரசன், ஒருபடி மேலே போய், ஆளுநர் ஆர்.என்.ரவியை அடங்காபிடாரி
என்று நம்மூர் பாஷையில் வர்ணித்து இருக்கிறார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னைத் தானே திருத்திக்கொண்டு தமிழ்நாடு அரசுடன் ஒத்திசைவுடன் செயல்படுவதற்கான எத்தனையோ வாய்ப்புகள் வந்து போயின. ஆனால் அவற்றை எல்லாம் அறிந்தும் அறியாதவர் போல வேண்டுமென்றே கடந்து போய்விட்டார்.
இப்போது எல்லை மீறிப்போய், கோ பேக் ஆர்.என்.ரவி
என்ற கோஷம் தமிழ்நாடு முழுவதும் முழங்கத் தொடங்கியிருக்கிறது. தமிழ்நாட்டு மாணவர்களும், பொதுமக்களும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடும் நிலையைத் தவிர்த்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம்!