fbpx
Homeலைப் ஸ்டைல்நூலிழை தான் வேறுபாடு….!

நூலிழை தான் வேறுபாடு….!

நட்புக்கும் காதலுக்கும் நூலிழை தான் வேறுபாடு. கோபத்துக்கும் பாசத்துக்கும் நூலிழை தான் வேறுபாடு. வெறுப்புக்கும் அன்புக்கும் நூலிழை தான் வேறுபாடு… என்றெல்லாம் சொல்வார்கள். அதேபோல, சிக்கனத்துக்கும் சேமிப்புக்கும் நூலிழைதான் வேறுபாடு.
சிக்கனம் என்றால் என்ன?
தேவையானவற்றுக்கு அளவாக செலவு செய்து, தேவையற்ற செலவுகளை தவிர்த்து, வரவையும் செலவையும் சமன் செய்து வாழ்தல்.

கஞ்சத்தனம் என்றால் என்ன?
தேவை என்றால் கூட செலவு செய்யாமல் கருமித்தனமாக காசை சேர்த்து வைத்தல்.
நமது பாரம்பரியத்தில் பெண்கள் எல்லாம் மிகவும் சிக்கனமாக இருப்பார்கள். அந்த காலத்தில் அடுப்புக்கு பக்கத்தில் ஒரு கயிறு கட்டி இருக்குமாம். அதன் நுனியில் நெருப்பு கங்காக எரிந்து கொண்டு இருக்குமாம். அடுப்புப் பற்ற வைக்க வேண்டும் என்றால் அந்த நெருப்பில் இருந்து எடுத்துக் கொள்வார்களாம். எவ்வளவு சிக்கனம் பாருங்கள்.
எனக்குத் தெரிந்த குடும்பத்தில் ஒருவர் வீட்டில் பின்புறத்திலே கொஞ்சம் இடம் இருந்தது. அதிலே, ஒரு மாமரம் இருந்தது. தென்னை மரங்கள் மூன்று, நான்கு இருந்தன. வீட்டுக்கு பின்னாலே சுடுதண்ணீர் அடுப்பு கட்டப்பட்டு இருந்தது.
தென்னை மட்டைகளை நறுக்கி, அடுக்கி வைத்து இருப்பார்கள். தென்னஞ் குச்சிகளை சீவி எடுத்து விளக்கமாரு கட்டி விடுவார்கள். தங்களுக்கு போக அந்த சீமார்களை அக்கம்பக்கத்தினருக்கு கொஞ்சம் குறைவான விலையில் விற்று விடுவார்கள்.

அதேபோல், தேங்காயை எடுத்துக்கொண்டு மட்டையைக் காயை வைத்து தண்ணீர் எடுக்கப் பயன்படுத்திக் கொள்வார்கள். ஓலைகளையும் அப்படித்தான்.
வீட்டிலேயே கோழி, வான்கோழி என்றெல்லாம் வளர்ப்பார்கள்.
இப்படி எந்தெந்த முறையில் சிக்கனமாக இருக்க முடியுமோ அவ்வளவு சிக்கனமாக இருப்பார்கள். அவர்கள், அந்த காலனியிலேயே பின்னாளில் ஒரு வீடு வாங்கினார்கள்.
பானை பிடித்தவன் பாக்கியசாலி என்பார்கள். அதாவது, வீட்டுக்கு வந்த பெண்மணி சிக்கனமாக இருந்தால் வளர்ச்சி வேகமாக இருக்கும் என்பார்கள். வீட்டுக்கு வருகிற மணமகன் கையிலே ஒரு சொம்பிலே தண்ணீரை கொடுத்து கால்களை கழுவிக் கொண்டு வரச்சொல்வார்கள். அந்த மணமகன் சொட்டை விழாமல் இரண்டு கால்களுக்கும் அந்த தண்ணீரை ஊற்றி கழுவிக் கொண்டு வந்தால் இவன் சிக்கனமாக குடும்பம் நடத்துவான் என்று கணிப்பார்களாம்.
அதேபோல, பெண்ணின் கையிலே தீப்பெட்டியைக் கொடுத்து விளக்கேற்ற சொல்வார்கள். எத்தனை குச்சிகளை அவள் பயன்படுத்துகிறாள் என்பதை வைத்து சிக்கனத்தை கணிப்பார்கள்.
வீட்டிலே மாடு வளர்த்து பால் கறந்து அந்த வருமானத்தை வைத்தே தனது இரண்டு குழந்தைகளையும் வளர்த்து படிக்க வைத்து அடுத்த தலைமுறையை நல்ல விதமாக உருவாக்கிய ஒரு பெண்மணியை எனக்கு தெரியும்.
கிராமத்து பெண்கள் பலர் இந்த விதத்தில் வல்லவர்கள். அதிலும், கொஞ்சம் நிலபுலம் இருந்தால் வீட்டுக்கு வேண்டிய காய்கறிகளை வளர்த்து குடும்பத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதிலும் வல்லவர்கள்.
பொதுவாக, மிகவும் கீழ் நிலையில் இருந்து வளர்ச்சி பெற்றவர்கள் எல்லாருக்கும் ஒவ்வொரு பைசாவின் முக்கியத்துவமும் தெரியும். அதனால்தான், எந்தப் பொருளை வாங்க வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்பதும் தெளிவாக இருப்பார்கள்.

சேர்த்த பணத்தை சிக்கனமாக செலவு பண்ண பக்குவமா... அம்மா கையில கொடுத்துபோடு சின்னக்கண்ணு... அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு...
என்று கவிஞன் கூட பாடி இருக்கிறான்.
எந்த வீட்டில் வருகிற வருமானத்தை திறமையான முறையில் செலவு செய்கிற மாதிரி குடும்பத் தலைவி அமைகிறாளோ அந்தக் குடும்பம் முன்னேறும் என்பதில் சந்தேகமில்லை.
கஞ்சத்தனம் என்னும்போது அவனா அவன் எச்சக் கையில் காக்கா ஓட்டமாட்டான் என்பார்கள். அதாவது, அப்படி காக்காவை விரட்டி விட்டால் கையிலே ஒட்டி இருக்கிற பருக்கை பறந்து விடுமாம். அந்த காக்கைகள் அதை சாப்பிட்டு விடுமாம். அதனால், எச்சக்கையால் கூட காக்காவை ஓட்டமாட்டானாம்.

வடநாட்டிலே ஒரு பிச்சைக்காரனைப் பற்றிய செய்தி ஒன்று வந்தது. இது நடந்த கதை.
பல நாட்களாக ஒரு பிச்சைக்காரர் ஒரே இடத்தில் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தார். கிழிந்த துணிமணியை உடுத்திக் கொண்டு இருப்பாராம். இறந்து விடுகிறார்.
அக்கம்பக்கத்தவர்கள் சேர்ந்து அவருக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கு ஏற்பாடு செய்கிறார்கள். அப்போதுதான் பார்க்கிறார்கள், அந்த பிச்சைக்காரர் அமர்ந்திருந்த இடத்தின் கீழே ஒரு குழியிலே பணம் எக்கச்சக்கமாக ஒரு மூட்டையிலே கட்டி இருந்ததாம்.

இதை என்ன சொல்வது?. நல்ல சாப்பாடு கூட சாப்பிடாமல், ஒரு நல்ல உடை உடுத்தாமல் கந்தலை அணிந்து கொண்டு அந்த காசை சேர்த்து வைத்த பிச்சைக்காரருக்கு பயன்படாமலே போனது. அந்த மனிதர் குறித்து என்ன சொல்வது?
வழக்கமான ஒரு கதை சொல்வார்கள். ஒரு மனிதர் இன்னொரு மனிதருக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறார். பாடம் சொல்லிக் கொடுக்கிற மனிதர் மற்றவரிடம் சொன்னார்.
தம்பி! நான் பேசுறேன். நீ கேட்கிற... அதுக்கு எதுக்குமா லைட்டு என்று சொன்னது மட்டும் இல்லாமல் விளக்கையும் அணைத்து விடுகிறார்.
கொஞ்சம் நேரம் போகிறது. அப்பொழுது யாரோ வந்து அழைப்பு மணியை அழுத்துகிறார்கள். பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தவர் எழுந்து கதவை திறக்கப் போகிறார்.
அந்த சமயம் வந்து, அண்ணா, அண்ணா இருங்கண்ணா... ஒரு நிமிஷம் பொறுங்க... என்று சொல்கிறார், பாடம் படித்துக் கொண்டு இருப்பவர்.
ஒரு நிமிடம் கழித்து இப்போது போங்க என்கிறார். என்னப்பா என்று கேட்டால், ஒரு இளிப்புடன் ஒண்ணும் இல்லண்ண… இருட்ல பாடம் சொல்லிக் குடுத்தீங்க நான் கேட்டுட்டு இருந்தேன். அதுக்கு எதுக்கு வேட்டி என்று நான் கழட்டி வச்சிட்டேன்.
எத்தனுக்கு எத்தன் என்கிற மாதிரி கஞ்சனுக்கு கஞ்சன்.

ஒரு திரைப்படத்தில் ஆச்சி மனோரமா நடித்திருப்பார். எதிர் வீட்டில் ஒரு கஞ்சன், ஒரு காகிதத்தில் கோழியின் படம் வரைந்து தொங்க விட்டு அதை பார்த்துக் கொண்டே சாப்பிடுவார். ஆச்சி மனோரமா கோழி கழுத்தில் கயறு கட்டி தொங்கவிட்டு அதை பார்த்துக்கொண்டே சாப்பிடுவார்

இப்படி கஞ்சத்தனமாக வாழ்கிறவர்கள் சிலரை பார்க்கும் போது நமக்கு பரிதாப உணர்வு தான் தோன்றுகிறது. வாழ்க்கையில் அனுபவங்களை அறிவார்களா அவர்கள்?
அதே சமயம் சிக்கனம் என்பது தேவையான ஒரு குணம். நான்கு கடைகள் ஏறிஇறங்கி, விலை குறைவாக ஆனால் தரமான துணிகளை வாங்குகிற ஒருவரை பாராட்டத்தான் வேண்டும். கௌரவத்திற்காக அதிக விலை கொடுத்து துணி வாங்கி அதை பத்து முறை அணிந்து விட்டு தூக்கிப் போடுவது புத்திசாலித்தனமா என்ன?

எதிரிலே இருக்கிற மளிகைக் கடையிலே போய் தினமும் அதிக விலை கொடுத்து காய்கறி வாங்குவதை விட, வாரம் ஒருமுறை உழவர் சந்தைக்கு போய் அந்த வாரத்திற்கு வேண்டிய காய்கறிகளை வாங்கிவிடுவது புத்திசாலித்தனம் அல்லவா?.
குழந்தைகளுக்கு சிக்கனத்தை கண்டிப்பாக பழக்க வேண்டும். குழந்தைகள் ஒரு பொருளை கேட்கும் போது, உட்கார வைத்து பேச வேண்டும். அந்த பொருள் வேண்டுமா? அது எத்தனை நாட்களுக்கு வரும். அது இல்லாமல் சமாளிக்க முடியுமா? என்றெல்லாம் அவர்களை யோசிக்க செய்ய வேண்டும்.
குழந்தைகளுக்கு ஒரு உண்டியல் கொடுத்து சேமிக்கப் பழக்க வேண்டும். அதுமட்டுமல்ல, உன் காசிலேயே ஒரு சைக்கிள் வாங்கிக்கோ, உன் காசிலேயே ஒரு பொருளை வாங்கிக்கோ, சட்டை வாங்கிக்கோ என்று பழக்கினால் அவர்களுக்கும் சிக்கனத்தின் அருமை புரியும்.

சிக்கனம் என்பது கைகொள்ள வேண்டிய ஒரு பழக்கம். கஞ்சத்தனம் என்பது தவிர்க்க வேண்டிய ஒன்று.
சிக்கனம் என்பது வளர்ச்சிக்கான ஒரு வழி. கஞ்சத்தனம் என்பது வீழ்ச்சிக்கான ஒரு வழி.
வாரன்பகட் என்ற ஒரு மனிதரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். பங்குச்சந்தையில் அசகாயசூரன். அவர் ஒரு நாள் ஒரு ஓட்டலுக்கு சென்று தங்குகிறார். கட்டணம் குறைவான ஒரு அறையைத் தேர்ந்தெடுக்கிறார். சுவாரஸ்யம் என்னவென்றால் அதே ஹோட்டலில் அவர் மகனும் தங்கி இருந்தார்.
ஆனால், அவர் அதிக கட்டணம் செலுத்தும் அறையில் தங்கி இருந்தார். அப்போது ஓட்டல் ஊழியர் வாரன்பகத்திடம் கேட்டாராம். என்ன சார், உங்க பையன் காஸ்டிலியான ரூம்ல தங்குறாரு. நீங்க என்ன குறைவான கட்டணத்தில் தங்குகிறீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு பகத் சொன்னாராம், அவங்க அப்பா பணக்காரரு. எங்க அப்பா அப்படி இல்லையே என்று!
அதனால்தான் சொன்னேன். கஷ்டப்பட்டு வளர்ந்தவர்களுக்கு சிக்கனத்தின் அருமை புரியும் என்று!
இப்படிச் சொல்வதால், செலவை அவசியமானதற்கு கூட செய்ய வேண்டாம் என்பது அல்ல பொருள்.
தொழிலில் வெற்றி பெற்ற சிலரைப் போல தங்கள் வாரிசுகளுக்கு அதிகம் செல்லம் கொடுத்து நடத்தும் தொழில் சாம்ராஜ்யங்கள் நிலைப்பது இல்லை. மாறாக, ஆடம்பரத்துக்கு அடிமை ஆகாமல் சிக்கனமாக நடத்தப்படும் நிறுவனங்கள் வீழ்ச்சி அடைந்தது இல்லை.

சிக்கனம் அறிந்தவர்கள் உருவாக்கிய தொழில்கள் தான் வளர்ச்சி அடைகின்றன. சிக்கனம் அறிந்தவர்கள் வழிநடத்திய குடும்பங்கள் தான் படிப்படியாக வளர்கிறது. பெரும் துன்பங்களில் ஆழ்ந்து போகாமல் தப்பித்துக் கொள்கிறார்கள்.
சிக்கனம் அறிந்தவர்கள் எளிமையாக இருப்பார்கள். செல்வந்தர்கள் ஆகி விட்டாலும் கூட அலட்டமாட்டார்கள். அமைதியாக நடப்பார்கள். அழகாக வாழ்க்கையை கடப்பார்கள்.
Êசமீபத்தில், யூடியூபில் ஒரு நடிகை மாய்ந்து போன இன்னொரு நடிகையை பற்றி சொன்னார். எதிர்பாராத விதமாக நடுத்தர வயதிலே மறைந்து போன புகழ் பெற்ற நடிகை அவர். ஆனால், அவர் இறந்த போது கடன் தான் நிறைய இருந்ததாம். இத்தனைக்கும் அவர் நிறைய படங்களில் நடித்து நிறைய சம்பாதித்தார். ஆனால், வாரத்திற்கு ஒருமுறை நிகழும் சினிமா சம்மந்தமான விஷயங்களில் தனது இரு மகள்களோடு பங்கு கொள்வாராம்.
ஒவ்வொரு முறையும் புத்தம் புது உடைகள் தான் அவர்கள் அணிவார்களாம். ஒவ்வொரு உடைக்கும் கிட்டத்தட்ட எழுபதாயிரம், எண்பதாயிரம் ஆகுமாம். மூன்று பேருக்கும் சேர்ந்து இரண்டு, மூன்று லட்சங்களுக்கு மேலே ஆகும்.
மாதத்தில் அந்த மாதிரி குறைந்தது பத்து லட்சத்திற்கு மேல் செலவு செய்தால், வாழ்க்கை நிலை எப்படி இருக்கும். இப்படித்தான் இருக்கும்!. அவரது மறைவிற்கு பின் தமிழ் நடிகர் ஒருவர் தான் அவருடைய குடும்பத்திற்கு இரண்டு படங்கள் நடித்து கொடுத்து உதவி செய்தாராம்.
அதனால் தான் நண்பர்களே! நம்முடைய பெரியோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
குந்தித் தின்றால் குன்றும் மாளும் என்று!

வரவுக்குள் செலவு செய்து அதில் கொஞ்சம் மிச்சம் வைத்தால் அந்த குடும்பம் வளர்ச்சி அடையும்.
ஒரே ஒரு தேங்காயை கொடுத்து அந்த நாளைய பிழைப்பை நடத்த வேண்டும் என்று சொல்லி தனக்கு மனைவி தேடிய ஒரு முனிவரைப் பற்றி நான் ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன். அப்படி ஏராளமான கதைகள் உள்ளன. மொத்தத்தில் சிக்கனம் வாழவைக்கும். கஞ்சத்தனம் ஆபத்தில் கொண்டு போய் விடும் என்பதை புரிந்து கொள்வதால் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான ஒரு பாதையில் நாம் முன்னே ஒரு அடி எடுத்து வைக்கிறோம் என்று பொருள், நண்பர்களே!
சிக்கனத்தை கைக் கொள்வோம். வாழ்க்கையை இலகுவாக்குவோம், நண்பர்களே!

படிக்க வேண்டும்

spot_img