fbpx
Homeபிற செய்திகள்ஆளுநர் ரவி உருவாக்கும் விரும்பத்தகாத சூழ்நிலை!

ஆளுநர் ரவி உருவாக்கும் விரும்பத்தகாத சூழ்நிலை!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பின்பற்றப்பட்டு வரும் மரபுகள் அடிப்படையில் ஆளுநர் உரை தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவாக தேசிய கீதமும் இசைக்கப்படும். கடந்தாண்டே சட்டப்பேரவை தலைவர், பேரவை மரபு குறித்து ஆளுநருக்கு தெரிவித்திருக்கிறார்.

ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு தயாரித்துள்ள உரையை இந்த ஆண்டும் வாசிக்காமலேயே வெளியேறி இருக்கிறார். முன்கூட்டியே முடிவு செய்து கொண்டு அதையே நிறைவேற்றிக் காட்டி தமிழ்நாடு சட்டமன்றத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி அவமதித்து விட்டார் என பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

புதிய ஆண்டில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் தொடக்கத்தில் ஆளுநர் நிகழ்த்தும் வழக்கமான உரை ஆண்டுதோறும் விரும்பத்தகாத நிகழ்வாக மாறி வருவது வருந்தத்தக்கது. அதற்கு முழு முதற்காரணமும் யார் என்பது ஊரறிந்த விஷயம். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இதனைச் செய்ததன் மூலம் சர்ச்சையை ஏற்படுத்துவதில் அவர் கொண்டிருக்கும் ஆர்வம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தனது உரையை புறக்கணித்து வெளியேறுவதற்காக அவர் கூறிய காரணம் சிறுபிள்ளைத்தனமானது என்றே அரசியல் விமர்சகர்களால் வர்ணிக்கப்படுகிறது. முந்தைய ஆண்டுகளைப் போலவே, இந்த நிகழ்வினை அப்பட்டமான அரசியலாக்கி இருக்கிறார்.

சட்டப்பேரவையில் பின்பற்றப்படும் நடைமுறையைப் பற்றி அவர் முன்பே தெரிந்திருந்தும், அதனை ஏற்காத நிலையில் முன்கூட்டியே அறிவித்து விட்டு சட்டப்பேரவையில் பங்கேற்பதையே புறக்கணித்து இருந்தால் கூட பரவாயில்லை.

ஆனால் அவைக்கு வந்து, அரசின் கொள்கை அறிக்கையை முன்வைக்கும் தனது அரசியலமைப்புக் கடமையை நிறைவேற்றுவதைத் தவிர்ப்பதன் மூலம் ஏன் ஒரு அசாதாரணமான சூழலை உருவாக்க வேண்டும்?

ஆளுநர் ஆர்.என்.ரவி 2021 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பொறுப்பேற்றதில் இருந்து பெரும்பாலும் அரசியல் சர்ச்சைகளில் அடிக்கடி ஈடுபட்டுள்ளார். ஒருபுறம் அரசியல் கருத்துகளை வெளியிடுவது, மறுபுறம் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிப்பது என்றே தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

இதனால் சட்டத்தின் செயல்பாடுகள் தடுக்கப்படுகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் நலன் தானே நசுக்கப்படுகிறது. இது பற்றி சிந்திக்க வேண்டாமா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு ஆளுநர்கள் எந்த இடையூறையும் ஏற்படுத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றம் ஒருமுறை அல்ல, பலமுறை இடித்துரைத்துரைக்கிறது. ஆனால் நடப்பது என்ன?

ஆக, பாஜக ஆளும் பிற மாநில ஆளுநர்களைப்போல ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசோடு ஒருமித்த உணர்வோடு செயல்பட முன்வர வேண்டும்.
அல்லது அவரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். மாநில அரசும் ஆளுநர் ஆர்.என்.ரவியும் இணைந்து செயல்படுவதற்கான அறிகுறியே தென்படவில்லை.

எனவே, அவரை திரும்பப்பெற்று தமிழ்நாட்டில் ஒரு சுமுகமான சூழலை உருவாக்கி ஆட்சிப்பணியை சுதந்திரமாக மேற்கொள்ள மாநில அரசுக்கு வழி ஏற்படுத்தி தரவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்குத் தான் உண்டு. அதனால் தான் ஆளுநரே திரும்பி போ என்ற முழக்கத்தோடு ஆளுங்கட்சியான திமுகவே களமிறங்கி போராடி உள்ளது.

இத்தனை சர்ச்சைகளுக்கு உரியவராக தொடர்ந்து குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை ஏன் இன்னும் மத்திய அரசு திரும்பப்பெற வில்லை? தாமதிப்பதன் மூலம் அவரது போக்குக்கு மத்திய அரசுக்கும் உடன்பாடோ என்ற ஐயம் தான் ஏற்படுகிறது.

எப்போது தான் தமிழ்நாட்டுக்கு நிம்மதி கிடைக்குமோ?

படிக்க வேண்டும்

spot_img