திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அவை அனைத்தும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வு காணப்பட்டு வருகிறது.
அந்த வகையில், திருப்பூரில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை வேண்டியும், சாலை வசதி, குடிநீர் வசதி வேண்டி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 418 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனையடுத்து, 14வது வாக்காளர் தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய வாக்குச் சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், திருப்பூர் சார் ஆட்சியர் சௌம்யா விஜயன், உதவி ஆட்சியர் (பயிற்சி) கிர்திகா எஸ்.விஜயன் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.