fbpx
Homeதலையங்கம்இந்தியாவுக்கே ஒளிகாட்டும் திறன்வாய்ந்த பட்ஜெட்!

இந்தியாவுக்கே ஒளிகாட்டும் திறன்வாய்ந்த பட்ஜெட்!

நடப்பாண்டின் தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள், சலுகைகள் அனைவரையும் கவர்வதாக உள்ளது.

குறிப்பாக, மூன்றாம் பாலினத்தோரின் கல்லூரிப் படிப்புக்கான முழுச் செலவையும் அரசே ஏற்கும், அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று உயர் கல்வி செல்லும் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் “தமிழ்ப் புதல்வன்” திட்டம்.

கோவையில் 20 லட்சம் சதுர அடியில் ரூபாய் 1100 கோடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா. குடிசைகள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு ரூபாய் 3500 கோடி.

மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்காக 6 இடங்களில் பாரா தடகள விளையாட்டு மையங்கள், 500க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவரைப் பணியில் அமர்த்தும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஊதிய மானியம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலன் சார்ந்த மகத்தான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்விக்கு கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக ரூ. 3743 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறைக்கு கடந்த பட்ஜெட்டை விட கூடுதலாக ரூ.1,245 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சமூக நீதிக்கு அடித்தளமாக, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களின் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டிற்கு தேவையான முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

-ஒன்றிய அரசின் நிதி தரவேண்டிய பங்களிப்பைக் கூட சரியாகத் தராமல், பொருளாதாரக் கொள்கை நெருக் கடியை வைத்துள்ள நிலையிலும், நிதிப் பற்றாக்குறை இருந்தபோதிலும், பல்வேறு புதிய திட்டங்களுக்காக ஏராள நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழி பயணம் மற்றும் தாய் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய ஏழு இலக்குகளை நிறைவேற்ற நிதிநிலை அறிக்கையில் திட்டங்களை வழங்கி இருக்கிற நிதி அமைச்சர் தங்கம் தென்னரசை அனைவரும் பாராட்டித் தான் ஆக வேண்டும்.

நிதிநிலை அறிக்கை நமது அரசின் கனவு! அது நாளை (இன்று) முதல் நனவாக வேண்டும். இதனை மனதில் வைத்து அனைத்துத் துறை அமைச்சர்களும் மாவட்ட ஆட்சியர்களும் மாவட்ட நிர்வாகமும் திட்டங்களை மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அதன்படி, அறிவிக்கப்பட்ட பட்ஜெட் அறிவிப்புகள் அனைத்தும் செயலாக்கம் பெறும் போது தமிழ்நாடு இன்னொரு படி முன்னேறி இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியாவிற்கே வழிகாட்டும் – ஒளி காட்டும் அரியதோர் பட்ஜெட்டைத் தந்த முதலமைச்சருக்கும், நிதியமைச்சருக்கும், நிதித் துறை செயலாளருக்கும் நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள் – வாழ்த்துகள்!

படிக்க வேண்டும்

spot_img