தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும் வலைகளை அறுத்தெறிந்து படகுகளைக் கைப்பற்றுவதும் தொன்றுதொட்டு நடந்து வரும் நிகழ்வாகவே மாறி விட்டது. பலவேளைகளில் மீனவர்கள் தாக்கப்படுவதும் சிலவேளைகளில் உயிரை இழப்பதும் உண்டு.
இதனால் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி அவர்கள் படும் துன்பம் சொல்லவொண்ணாதது. தமிழ்நாட்டு மீனவர் பிரச்னைக்கு நிரந்தத் தீர்வு காண வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசு, அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்களின் விருப்பம். இதற்காக ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதங்கள் கணக்கிலடங்காது.
இப்படிக் கோரிக்கை போகும்போது ஒப்புக்கு ஏதோ நடவடிக்கை எடுப்பதால் மீனவர்களை இலங்கை அரசு விடுவிக்கிறது. இது தான் தொடர்ந்து நடந்து வருகிறதே தவிர நிரந்தரத் தீர்வு காண ஒன்றிய அரசு முனைப்பு காட்டவதே இல்லை, இது தான் உண்மை. கச்சைத்தீவை மீட்டெடுத்தால் மட்டுமே நிரந்தர தீர்வுக்கு வழி கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
கச்சத்தீவை பாஜக மீட்கும் என்று அண்ணாமலை கூட சில மாதங்களுக்கு முன் குரல் எழுப்பினார். இப்போது அந்த குரலும் அடங்கி விட்டது. நிரந்த தீர்வு வேண்டுமென தமிழ்நாடு அரசு கேட்டது கிடைக்கவில்லை. இந்திய (தமிழ்நாட்டு) மீனவர்கள் கேட்டார்கள், கிடைக்கவில்லை. இப்போது சென்னை உயர்நீதிமன்றம் கேட்டிருக்கிறது.
மீனவர் சங்கம் தொடர்ந்த வழக்கு ஒன்றில், தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு எழுப்பிய கேள்வி தமிழ்நாட்டு மக்களைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
மீனவர்கள் கைது நடவடிக்கை என்பது தொடர் நிகழ்வாக இருக்கிறது. இதனைத் தடுக்க ஏன் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தான் நீதிபதிகளின் கேள்வி.
இந்திய திருநாட்டைப் பொறுத்தவரை தீராத பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வைத் தருவது நீதிமன்றம் தான். இப்போது இந்த பிரச்னையை உயர்நீதிமன்றம் கையிலெடுத்திருக்கிறது.
உரிய விளக்கம் அளிக்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. எல்லாம் ஒன்றிய அரசின் கையில் தான் உள்ளது. அவர்கள் அளிக்கப் போகும் விளக்கம் மீனவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக இருக்க வேண்டும்.
நீதிமன்றமே தலையிட்டு, இந்தியா மற்றும் இலங்கை அரசுகளை பேச வைத்து தமிழ்நாட்டு மீனவர்களுக்கு புதிய விடியலை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையை நீதிபதிகளின் கூர்மையான கேள்வி உருவாக்கி இருக்கிறது.
இது ஒருபுறமிருக்க, தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வந்து போகும் பிரதமர் மோடி இரு வாரங்களில் மீண்டும் வரவிருக்கிறார். அப்போதாவது தமிழ்நாட்டு மீனவர் பிரச்னையை அவரது கவனத்திற்கு தமிழக பாஜக தலைவர்கள் கொண்டு சென்று பேசவைக்க வேண்டும்.
எந்த வழியிலாவது தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைத்தால் போதும்!