fbpx
Homeபிற செய்திகள்சக்தி வாய்ந்த மனிதர்கள் டாப் 10 பட்டியலில் முதலமைச்சர் ஸ்டாலின்!

சக்தி வாய்ந்த மனிதர்கள் டாப் 10 பட்டியலில் முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள், அரசின் சாதனைகள் குறித்து சட்டமன்றத்தில் இந்த ஆண்டு துவக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டது நினைவிருக்கலாம்.

அவர் தனது உரையில் தெரிவித்ததாவது: “என் கையில் முதலமைச்சர் என்ற பொறுப்பு வந்து 33 மாதங்கள் ஆகிறது. இவை முன்னேற்ற மாதங்கள்! சாதனை மாதங்கள்! இந்தியாவின் பொருளாதாரத்துக்கு 9 விழுக்காடு பங்கைத் தருகிறது தமிழ்நாட்டின் பொருளாதார வளம்! இது, திராவிட மாடல் ஆட்சியின் முதல் சாதனை.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அளவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது; இது, இரண்டாவது சாதனை.

ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி 7.24 விழுக்காடாக இருக்கும்போது தமிழ்நாட்டின் வளர்ச்சியானது 8.19 விழுக்காடாக உயர்ந்துள்ளது! இது, மூன்றாவது சாதனை.
இந்திய அளவில் பணவீக்கமானது 6.65 விழுக்காடாக இருக்கும்போது, தமிழ்நாட்டில் அது 5.97 விழுக்காடாக குறைந்து உள்ளது! இது, நான்காவது சாதனை.

ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது! இது, ஐந்தாவது சாதனை. மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது! இது, ஆறாவது சாதனை.

தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக 14-ஆவது இடத்தில் இருந்த தமிழ்நாட்டை 3-ஆவது இடத்துக்கு உயர்த்தி உள்ளோம்! இது, ஏழாவது சாதனை. கல்வியில் இரண்டாவது இடத்துக்குத் தமிழ்நாட்டை உயர்த்தியது இந்த ஆட்சியின் எட்டாவது சாதனை.

புத்தாக்கத் தொழில்கள் வரிசையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பது ஒன்பதாவது சாதனை. இளைஞர் கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், விளிம்புநிலை மக்கள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து, தங்களது வாழ்க்கைத்தரம் உயர்ந்து வருவதாகச் சொல்லத் தொடங்கி இருப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் பத்தாவது சாதனை.

இவ்வாறாக பத்து சாதனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரிசைப்படுத்தினாலும் இந்தப் பட்டியல் தடைகளை மீறி 100வது சாதனையை நோக்கி நீண்டு கொண்டே போகிறது.

இந்த சாதனைகளில் பலவற்றை ஒன்றிய அரசே பாராட்டி சான்றளித்துள்ளது. தற்போது இன்னொரு அங்கீகாரமாக, இந்தியாவின் பிரபல பத்திரிகையான ‘இண்டியா டுடே’ வின் இந்த நவம்பர் மாத இதழில் “இந்தியாவின் அதிகார சபை” என்ற தலைப்பில் சக்தி வாய்ந்த மனிதர்கள் டாப் 10 பட்டியலில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 8வது இடம் வழங்கி உள்ளது.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் என நீளும் இந்த பட்டியலில் 5 மாநில முதலமைச்சர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பட்டியலில் இடம் பெற்றதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்தும் இண்டியா டுடே விவரித்துள்ளது.

குறிப்பாக, அடக்கமான போர்வீரர், தென் கோட்டையைப் பிடித்து வைத்திருப்பவர், மொழித் தடையால் மு.க.ஸ்டாலின் பேச்சு வடக்கு மாநிலங்களை அடையாமல் இருக்கலாம், ஆனால் பூர்வீக நிலமான தமிழ்நாட்டில் அவருக்குள்ள செல்வாக்கு காரணமாக அவரின் குரல் டெல்லி அதிகாரத்தின் செவியை எட்டுகிறது, லோக்சபா தேர்தலில் எல்லா மாநிலங்களிலும் பாஜகவுக்கு சில தொகுதிகள் கிடைத்த சூழலிலும் தமிழ்நாட்டில் ஒரு இடம் கூட கிடைக்காமல் செய்தது, தென்னிந்தியாவில் இந்தியா கூட்டணிக்கு ஒரு முக்கிய அம்சமாக மு.க.ஸ்டாலின் எஃகு போல திகழ்கிறார், ரூ.9.74 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார்…என்பது உள்ளிட்ட காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன.

இந்தியாவின் டாப்-10 பட்டியலில் முதல்வர் ஸ்டாலின் இடம் பிடித்திருப்பதன் மூலம் அரசு நிர்வாகத்தில் சிறந்து விளங்குகிறார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமா பெருமை? தமிழ்நாடு அரசுக்கு மட்டுமா பெருமை? இல்லை, இல்லவே இல்லை. ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே கிடைத்த பெருமை அல்லவா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதனைப் பயணம் தொடரட்டும்!

படிக்க வேண்டும்

spot_img