fbpx
Homeதலையங்கம்உச்சநீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடிக்கு நிம்மதி!

உச்சநீதிமன்றத் தீர்ப்பால் தூத்துக்குடிக்கு நிம்மதி!

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, கடந்த 2018ம் ஆண்டு மக்கள் நடத்திய போராட்டத்தின்போது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு கொள்கை முடிவெடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது. மூடப்பட்ட ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்திருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்ததது. வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் வேதாந்தா நிறுவனத்தை சரமாரியாக சாடியது.

அதாவது, “தூத்துக்குடி மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். சாமானிய மக்கள் நேரடியாக நீதிமன்றம் வர முடியாது என்றாலும் அவர்களது கவலையை புறந்தள்ள முடியாது. அதே சமயம், தமிழ்நாடு அரசின் ஆட்சேபணைகளையும், சந்தேகங்களையும் நீதிமன்றம் புறந்தள்ள முடியாது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை தவறு என கூற முடியாது. தமிழக அரசு ஆலையை மூடி சீல் வைத்தது சரியானதுதான். சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது மாநில அரசின் முக்கியமான வேலைகளில் ஒன்று” என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்தது.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கவே முடியாது என்பது உறுதியாகி விட்டது. இதனை தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்து வரவேற்கின்றனர். இந்த நல்ல தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

சிறப்பான வாதங்களை முன்வைத்து தூத்துக்குடி மக்களுக்கு நிம்மதி தரும் அரிய தீர்ப்பைப் பெற்றுத் தந்த தமிழ்நாடு அரசுக்கும் பாராட்டுகள்!

படிக்க வேண்டும்

spot_img