fbpx
Homeதலையங்கம்கங்கனா ரனாவத் எம்பியின் தேவையில்லாத நிபந்தனை!

கங்கனா ரனாவத் எம்பியின் தேவையில்லாத நிபந்தனை!

சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில், இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டவர் நடிகை கங்கனா ரனாவத். இதில் வெற்றி பெற்று, எம்பியாகவும் மக்களவையில் பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், ”தொகுதி மக்கள் தன்னைக் காண விரும்பினால், ஆதார் அட்டையுடன் வர வேண்டும்” என கங்கனா ரனாவத் நிபந்தனை விதித்துள்ளார்.

நான் மண்டியில் இருக்கும் ஒவ்வொரு நேரத்தையும் என் தொகுதி மக்களுக்காக அர்ப்பணிக்க விரும்புகிறேன். இந்த இடத்தில் என் தொகுதி மக்களை தவிர வேறு யாரையும் நான் சந்திக்க விரும்பவில்லை. இமாச்சலப் பிரதேசம் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரக்கூடிய மாநிலம். எனவே, எனது தொகுதி மக்கள் சிரமத்தைச் சந்திக்கக்கூடாது என்பதற்காகவே ஆதார் அட்டையுடன் வரவேண்டும் எனக் கூறுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

மக்களுக்காகத் தான் இப்படிச் செய்வதாக ஒரு காரணத்தைச் சொல்லி கங்கனா ரனாவத் ஆதார் நிபந்தனை விதித்திருந்தாலும் அது ஏற்கத் தக்கதல்ல. அவரது அறிவிப்பு சர்ச்சையை எழுப்பி இருப்பதோடு கண்டனத்திற்கும் ஆளாகி உள்ளது.
கங்கனா ஒரு மக்கள் பிரதிநிதி. குறிப்பாக அவர் தனது தொகுதி மக்களை எந்த நிபந்தனையுமின்றி சந்திப்பது அவரது பொறுப்பு. எந்தவித பணியாக இருந்தாலும் சரி அல்லது கொள்கை விஷயம், தனிப்பட்ட வேலை என எதுவாக இருந்தாலும் சரி, மக்கள் அவரை எந்தவித அடையாளமும் இல்லாமல் சந்திக்க அனுமதிப்பது தான் ஜனநாயக நடைமுறை. காங்கிரஸ் கட்சியும் தனது எதிர்ப்பைப் பகிர்ந்துள்ளது.

தான் நடிகையாக இருப்பதால் பாதுகாப்பு கருதி இப்படி ஒரு அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கலாம். வேண்டுமானால் தகுந்த பாதுகாப்புடன் மக்களைச் சந்திக்க ஏற்பாடு செய்து கொள்ளலாம். ஆதார் நிபந்தனை என்பது ஒரு தவறான முன்னுதாரணமாகி விடும் என்பதை கங்கனா ரனாவத் யோசித்து இருக்க வேண்டும்.
ஒரு ஊராட்சித் தலைவர் கூட மக்கள் பிரதிநிதி தான். அவரைப் போன்றவர்களும் இதே போல அறிவித்தால் என்னவாகும்?
அறிவிப்பை வாபஸ் பெறுவாரா கங்கனா ரனாவத் எம்.பி?

படிக்க வேண்டும்

spot_img