வால்பாறையில் மக்களின் அடிப்படைத் தேவைகளை செய்து தர வேண்டும் என்று, கோவை மாவட்ட வால்பாறை சிஐடியு தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் வால்பாறை பரமசிவம் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
தமிழக நகராட்சித் துறை அமைச்சர், நகராட்சித் துறை செயலாளர் ஆகியோருக்கு அவர் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
வால்பாறை நகராட்சியில் நிரந்தர ஆணையர் இல்லாததால், டவுன் பகுதிகளில் பொதுமக்கள் குடியிருப்புக்கு அருகே நடைபாதை குண்டும் குழியுமாகவும், நகராட்சி கடைகளில் மேற்கூரை வழியாக மழைநீர் உள்ளே வருவதால் வியாபாரிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இது தொடர்பாக யாரிடமும் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை இல்லை. தேவையில்லாத இடங்களில் பேருந்து நிலையத்தை கட்டுவதும், ஒரு சிலரின் சுய நலனுக்காக வளர்ச்சிப் பணிகள் என்ற கோர்வையில் மக்களின் வரிப்பணத்தை வீணாக்குகின்றனர். இதனால் அரசின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது.
இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு நிரந்தரமாக நகராட்சி ஆணையரை நியமித்து மக்களின் அடிப்படைத் தேவைகளை செய்து தர வேண்டும். வால்பாறை பகுதியில் உள்ள பேருந்து நிலையங்களில் அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை.
பல கட்டண கழிப்பிடங்கள் பல லட்ச ரூபாய் செலவு செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் அரசின் மக்கள் வரிப்பணம் வீணாகிறது. மார்க்கெட் பகுதிகளில் கழிப்பிட வசதிகள் கிடையாது.
இயற்கை மிகுந்த பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான கழிப்பறை செய்திகள் செய்து கொடுக்காமல் இருப்பது மிகவும் வேதனையாக உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.